கடந்த 34 வருடங்களுக்கு மேலாகப் படையினரால் வலிந்து கையகப்படுத்தப்பட்டிருக்கும் பொதுமக்களின் காணிகளைப் படிப்படியாக விடுவிப்பதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
முதற்கட்டமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயப் பகுதியினுள் அடங்கும் காணிகளை இனங்கண்டு, அவற்றின் உரிமையாளர்களை அடையாளப்படுத்தி காணி உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த நடவடிக்கைகளுக்காக புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரையும், வடமாகாண ஆளுநர், நிர்வாக உத்தியோகத்தர்கள்,படை உயரதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்றை அமைப்பதற்கும், அதற்கான முன் மொழிவுகள் அடங்கிய வர்த்தமாணி அறிவித்தல் ஒன்றை வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 21 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டதும், வரும் வாரமளவில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.