குடும்பப் பெண் ஒருவரைத் தன்னுடன் தகாத உறவுக்கு வருமாறு அழைத்த பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரால் மாவிட்டபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவத்தைச் சமரசம் பேசி, மூடி மறைப்பதற்குப் பொலீஸ் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சம்பவம் பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்தச் சம்பவம் இன்று காலை, காங்கேசன்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது: காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் மாவிட்டபுரம் பகுதியில் உள்ள தையலகம் ஒன்றில் தைப்பதற்கு கொடுத்த சீருடையை எடுப்பதற்குச் சென்றுள்ளார்.
மது போதையில் காணப்பட்ட அவர், அங்கு பணிபுரியும் பெண்களுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டதுடன், தன்னுடன் தகாத உறவுக்கு வருமாறு அவர்களை அழைத்துள்ளார். அதேநேரம், தையலகத்துக்கு வந்த யுவதிகளிடமும் தகாத முறையில் பேசி அவர்களையும் உறவுக்கு வருமாறு கொச்சைத் தமிழில் கேட்டுள்ளார்.
அதனை அவதானித்த அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களால் அந்தப் பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்ட பின்னர், முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவரும், அவரது கணவரும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காகப் பொலீஸ் நிலையத்துக்கு வந்திருந்தனர். அங்கு வைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அந்தப் பெண்ணை விசாரித்தார்.
“தன்னிடம் கார் உள்ளதாகவும் நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்னுடன் பாலியல் இச்சைக்கு வருகிறாயா ?” என்று கேட்டு மதுபோதையில் கலகம் செய்ததாக அந்தப் அப்பெண் கூறினார்.
அந்த நேரத்தில் அங்கு நின்ற பெண்ணின் உறவினர் ஒருவர் தன்னிடம் சம்பவத்தின் காணொலியும் உள்ளதாக தெரிவித்தார்.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விசாரணை செய்து கொண்டிருந்த போது, சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் பெண்ணின் கணவன் மீது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடாத்தியுள்ளார்.
அங்கிருந்த ஏனைய பொலீஸ் உத்தியோகத்தர்கள் தாக்குதல் நடத்திய பொலீஸ் உத்தியோகத்தரைத் தடுத்து நிறுத்தியதுடன், இரு தரப்பாரையும்
பொறுப்பதிகாரி அறைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, பாதிக்கப்பட்டவர்களை சமரசமாகப் போகுமாறு பொறுப்பதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் சமரசத்துக்கு உடன்படாமல், சம்பவம் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
உடனடியாக்க் காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் பாதிக்கப்பட்டவர்களின் முறைபாடு குற்றவியல் சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும், சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடொன்றை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு பாதிக்கப்பட்டவர்களுக்கும் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.