இலங்கையினுள் சீன ரேடார் தளம் ஒன்றை அமைப்பதற்கு சீனா தயாராகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைக் கடற்பகுதியும் உள்ளடங்கிய பகுதியில் இந்திய கடற்படையின் மூலோபாயக் கண்காணிப்பைக் கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட ரேடார் அமைப்பு, பிராந்தியத்தில் புது டெல்லியின் மூலோபாய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அதேவேளையில், இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்தும் என்று “த எக்கணமிக் ரைம்ஸ்” தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து தென்கிழக்கே சுமார் 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலங்கையின் தேவேந்திர முனையை அண்மித்த பகுதியில் இந்த ரேடார் நிறுவப்படவுள்ளது. சீன அறிவியல் அகடமியின் விண்வெளித் தகவல் ஆய்வு மையம் இந்தச் செயற்றிட்டத்துக்குத் தலைமை தாங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
தேவேந்திர முனையில் இருந்து தென் மேற்கே ஆயிரத்து 700 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள டியாகோ கார்சியாவில் உள்ள இராணுவ தளத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் திறன் நிறுவப்படவுள்ள ரேடாருக்கு இருப்பதாகவும் தொடர்புடைய தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அறிக்கையின் படி, ரேடார் அமைப்பு சீனாவால் வெற்றிகரமாக நிறுவப்பட்டால், அது முன்மொழியப்பட்ட ரேடார் வரம்பிற்குள் உள்ள இந்திய இராணுவ மையங்களை மோசமாகப் பாதிக்கும் என்றும், இலங்கையில் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சீன கண்காணிப்பு மையம் அதன் கிழக்கில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் எல்லை வரை வீச்செல்லை கொண்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
