தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக் குறியாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக் கோரியும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தைக் கண்டித்தும் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அரசியல் கட்சிகள், மத தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற் சங்கங்களின் கூட்டிணைவில் போராட்ங்களை முன்னெடுப்பதற்கு இணக்கங் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தில் 7 அரசியல் கட்சிகளும், 22 இற்கும் மேற்பட்ட சிவில், மத, தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
அந்தக் கூட்டத்தில், போராட்டங்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஐவர் அடங்கிய ஏற்பாட்டுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஐச் சேர்ந்த கலாநிதி.க.சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் குருசுவாமி சுரேந்திரன், புளொட்டைச் சேர்ந்த பாலச்சந்திரன் கஜதீபன், தமிழ் அரசுக் கட்சித் தலைவரின் மகன் சேனாதிராஜா கலையமுதன், ரெலோவைச் சேர்ந்த சுவீகரன் நிஷாந்தன் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
முதலாவது மக்கள் போராட்டம் யாழ்ப்பாணத்திலும் அதன் பின் கணிசமான இடைவெளிகளில் வடக்கு, கிழக்கின் ஐந்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். எனினும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புகளுடனான சந்திப்புக்களின் பின்னர் அந்தந்த மாவட்டங்களுக்கான போராட்டத் திகதிகள் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.