இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஐ. எம். எஃப் அதிகாரி வலியுறுத்தல்!

இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்து நிலையான மற்றும் உள்ளடக்கிய மீட்சியை ஊக்குவிக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைமை அதிகாரி பீட்டர் புரூவர் தெரிவித்துள்ளார்.

யூடியுப் வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மீட்சி மற்றும் ஸ்திரத் தன்மைக்கு ஊக்குவித்தல்ஆகியவை குறித்து வீடியோவில் கருத்து தெரிவித்துள்ள அவர் அதிகரித்த பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கொள்கைத் தவறுகளுக்குப் பின்னர் இலங்கை மீளகட்டியெழுப்புவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் உதவுவதற்கே இங்கு வந்துள்ளது. இலங்கைக்கு மிகவும் தேவையான தருணத்தில் அடுத்த நான்கு வருடத்துக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2019 முதல் காணப்பட்ட குறிப்பிடத்தக்க அளவு வரி விலக்களிப்பும், எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தங்களில் காணப்பட்ட தாமதங்களும் இலங்கை அதிகளவு கடன் குறைந்தளவு அந்நியச் செலாவணி கையிருப்புடன் கொரோனாப் பெருந்தொற்று காலத்துக்குள் நுழைய வேண்டிய நிலையை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ள பீட்டர் புரூவர் அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லாததால் மின்சாரம், எரிபொருள், உணவு மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றுக்கான தட்டுப்பாடு உருவானது. நீண்ட பெட்ரோல் வரிசைகள் உருவாகின எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தனது வரலாற்றில் முதல் தடவையாக தனது கடனைத் திருப்பி செலுத்த முடியாத வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கான சுலபமான தீர்வுகள் இல்லை. இந்தப் பாரிய பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் அதேவேளை நலிவடைந்த நிலையில் உள்ள மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்,என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி சர்வதேச சமூகம் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும், அதன் காரணமாக இலங்கை மீண்டும் வலுவான உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!