2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையில் கொல்லப்பட்டவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நாடெங்கிலும் பரவலாக இடம்பெற்றுள்ளன. தேசிய ரீதியாகப் பிரதான நிகழ்வு காலி பெரலிய சுனாமி நினைவுத் தூபியில் இடம்பெற்றது.
இலங்கையில் சுனாமி அனர்த்தத்தின் காரணமாக 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதுடன் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். அதனை நினைவு கூரும் வகையிலும், நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையிலும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்றைய நாளை தேசிய பாதுகாப்பு தினமாகப் பிரகடனப்படுத்தியிருந்தது.
அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் இன்று காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி நிகழ்வு நடெங்கிலும் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம்- உடுத்துறையில் அமைந்துள்ள சுனாமிப் பொது நினைவாலயத்தில் உறவுகளைப் பறிகொடுத்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடித் தம் உறவுகளைக் கண்ணீர்மல்கக் கசிந்துருகி நினைவு கூர்ந்தனர்.