இலங்கையில் பெரும் எண்ணிக்கையான ஊடவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட கடந்த காலச் சம்பவங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்கு அரசாங்கம் ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறப்பினருமான ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியமும் லண்டன் – இலங்கை கலை இலக்கிய நிறுவகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மூத்த பத்திரிகையாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு ஹக்கீம் உரையாற்றினார்.
போர்க்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பல தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அதேபோன்று தென்னிலங்கையிலும் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதுடன் தாக்குதலுக்கும் உள்ளானார்கள்.
உலகில் ஊடகவியலாளர்களுக்கு படுமோசமான ஆபத்து மிகுந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்கிய காலத்தில் பெரும் எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்குச் சென்றார்கள்.
ஊடகவியலாளர்கள் கொலைகள் குறித்து விசாரணை செய்ய ஆணைக்குழுவொன்றை அரசாங்கம் நியமித்து உண்மையைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தினார்.
ஹக்கீமின் கோரிக்கையை ஆதரித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும் பேசினார்.
நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உட்பட பல அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு பாரதி இராஜநாயகத்தின் ஊடகத்துறைப் பணியை பாராட்டி நினைவு கூர்ந்தனர்.
