- 80 பேரின் சடலங்கள் மீட்பு : 32 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
- இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா நடாத்திய மிகப்பெரும் கடற் தாக்குதல் என அமெரிக்கா பெருமிதம்.
- கடற்கலம் முற்றாக நீரில் மூழ்கடிப்பு.
இந்து சமுத்திரத்தில் – இலங்கையின் காலிக் கடற்பகுதிக்கு அண்மையாகக் கரையிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் ஈரானிய போர்க்கலம் ஒன்று ஐக்கிய அமெரிக்காவின் நீர் மூழ்கிக் கலமொன்றின் தாக்குதலால் நீரில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா மேற்கொண்ட மிகப் பெரும் வெற்றிகரக் கடற் தாக்குதல் என்று வர்ணித்திருக்கும் அமெரிக்க பாதுகாப்புத் துறை தாக்குதல் தொடர்பான காணொலியையும் வெளியிட்டிருக்கிறது.
இன்று அதிகாலை முதல் காலியை அண்மித்த கடற்பரப்பில் கடற்கலமொன்று எரிந்தபடி நீரில் மூழ்குவதாகவும், கடற்கலம் தாக்குதலுக்கு உள்ளாகியதன் காரணமாகவே மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்ட போதிலும் இன்று பிற்பகல் வரை சுயாதீன செய்தி வட்டாரங்கள் எவையும் அதனை உறுதி செய்யவில்லை.
எனினும், ஈரானுக்குச் சொந்தமான “ஐரிஸ் டேனா” என்ற பெயருடைய இந்தக் கடற்கலத்தை “டோப்பிற்றோ” தாக்குதல் மூலம் நீருக்கடியில் வைத்துத் தாக்கி அழித்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இன்று முன்னிரவு உறுதிப்படுத்தினார்.
மேலும், சர்வதேச கடலில் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்ட இரானிய போர்க் கப்பல் ஒன்றை இந்தியப் பெருங்கடலில் வைத்து நீர்மூழ்கிக் குண்டினால் அமெரிக்கா மூழ்கடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கடற்கலத்தில் பயணித்த சுமார் 180 க்கும் அதிகமான ஈரானிய கடற்படையினரில் 110க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது, கொல்லப்பட்டவர்களுடையதெனக் கருதப்படும் சடலங்கள் பலவற்றை இலங்கைக் கடற்படையினர் மீட்ட வண்ணமுள்ளனர். இன்று முன்னிரவு இந்தச் செய்தி எழுதப்படும் வரை சுமார் 80 சடலங்கள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தன.
தாக்குதலின் போது காயமடைந்த 32 பேர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, காலி – கராப்பிடி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், எரிகாயங்கள், வெட்டுக் காயங்களுடன் மற்றும் என்பு முறிவுக்குட்பட்ட பலர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் கடற்படையில் ஊடகப் பேச்சாளர் புத்திக சம்பத் குறிப்பிடுகையில், “இன்று அதிகாலை 05.08 மணியளவில் கிடைத்த பேரிடர் அழைப்பைத் தொடர்ந்து இலங்கை கடற்படைக் கப்பல்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன, மேலும் விமானப்படையுடன் கூட்டு மீட்பு நடவடிக்கையும் தொடங்கப்பட்டது. சம்பவம் இடம்பெற்ற பகுதி இலங்கையின் கடல் ஆதிக்கத்துக்கு அப்பாற்பட்ட பகுதி ஆயினும் அவசரத்துக்கு உதவி செய்ய வேண்டிய அயலிலுள்ள நாடு என்ற வகையில் கடற்படையினரும், விமானப்படையினரும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்” என்றும்,
சம்பவ இடத்துக்குச் சென்ற வேளையில் கடற்பரப்பில் கடற் கலம் எதையும் காண முடியவில்லை. கடற்பரப்பில் சிந்திக் கிடந்த எண்ணைப் படலங்களை வைத்தே கலம் மூழ்கடிக்கப்பட்ட பகுதியை அடையாப்படுத்த முடிந்தது என்றும், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்ப்பித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், கடற்படையினரின் மீட்புப் பணிகளின் போது சம்பவத்தில் கொல்லப்பட்ட பலரது சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம், இந்தச் சம்பவம் பற்றிய முழுமையான தகவல்கள் வெளிவருதற்கு முன்னரே இன்று காலை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இது தொடர்பாகச் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரது கேள்விக்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இன்று அதிகாலை காலி கடற்கரையிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் ஈரானிய கடற்படைக் கப்பல் விபத்துக்குள்ளானதாக அறிவித்ததை அடுத்து, அதில் சுமார் 180 பேர் இருந்ததாகவும், அவர்களை மீட்கும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தாக்குதலுக்குள்ளாகி மூழ்கடிக்கப்பட்ட “ஐரிஸ் டேனா” என்ற போர்க் கப்பல் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கடற்படைக்குச் சொந்தமான மிகப் பலம் பெருந்திய போர்க் கலங்களில் ஒன்றாகும். பல ஏவுகணைகளையும், பீரங்கிகளையும் தன்னகத்தே கொண்டிருந்த இந்தக் கடற்போர்க் கலம் கடந்த மாதம் பயிற்சி நடவடிக்கை ஒன்றுக்காக இந்தியாவின் விசாகப்பட்டணம் துறைமுகத்துக்கு வந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
