கடந்த 2019 ஆம் ஆண்டு முழு நாட்டையும் உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புத் தாக்குதல் குறித்த விசாரணைகளில் அதிரடித் திருப்பமாக அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி , ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே பேலியகொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 7:50 மணியளவில் பேலியகொடை பகுதியில் வைத்து சுரேஸ் சாலே கைது செய்யப்பட்டார் என்பதைப் பொலீஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகமோசமான பயங்கரவாதத் தாக்குதல் என்று குறிப்பிடப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான தகவல்களை அறிந்திருந்த போதிலும், தாக்குதலைத் தடுக்கத் தவறிவிட்டார் என்று மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. அக் குற்றச்சாட்டுகளை அவர் அடியோடு மறுத்திருந்தார்.
எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் மூலம் பெறப்பட்ட தெளிவான ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் பொலீஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் எவ்.யு. வூட்லர் நேற்று நண்பகல் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
விசாரணைகளின் இரகசியத் தன்மையின் அவசியம் கருதி சாலே மீதான குற்றச்சாட்டுகள் தற்போது வெளியிடப்படாது என்றும், அவருக்கு எதிரான விசாரணை முடிந்த பின்னரே அவை பொது மக்களுக்கும், ஊடகங்களுக்கும் வெளியிடப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்றுக் காலை கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
