கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னைநீராவி நாதன் திட்ட கிராமத்தில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரணத்தில் சந்தேகம் கொண்டுள்ள பொலீஸார் சம்பத்தைக் கொலை என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் சந்தேகம் கொண்டுள்ள பொலீஸார், மரணமடைந்தவரின் மகனைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மகனுக்கு வயது 14.
இன்று காலை சம்பவ இடத்துக்கு வருகைதந்த கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் சடலத்தைப் பார்வையிட்டு, மரண விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார். சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.