இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களைத் திட்டமிடப்பட்டபடி நடத்த விடாமல் அரசாங்க அதிகாரிகள் சீர்குலைக்க முனைவதை இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு அரசியல் அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவதைக் கண்டித்துள்ள இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம், எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்தி முடிக்கப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த விடாமல் சீர்குலைக்கும் அரச அதிகாரத் தரப்பை சாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேர்தல்கள் அனைத்தும் நாட்டில் ஜனநாயகத்தைப் பேணுவதற்கு இன்றியமையாதன என்றும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.