இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா நாளை திறப்பு!

இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. கண்டி ஹந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த சுற்றாடல் சுற்றுலா வலயம் “ஹந்தானை சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையம்” என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பூங்கா நாளை 20ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த பூங்கா எதிர்வரும் 23ஆம் திகதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். ஹந்தானை தேயிலை அருங்காட்சியக வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த 27 ஏக்கர் புலம்பெயர் பறவை பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகளின் இருப்பிடமாக உள்ளது. வெளிநாடுகளுக்குச் சொந்தமான பறவைகள், புலம்பெயர் பறவைகள் போன்றவற்றை உள்ளடக்கிய பூங்காவில், காயமடைந்த பறவைகளுக்கு சிகிச்சை அளித்து விடுவிக்கும் பிரிவும் உள்ளது. 490 மில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்டுள்ள இந்த பறவை பூங்காவில் வெளிநாட்டு பறவைகள் பெரிய கூண்டுகளில் அடைத்து வைக்கபட்பட்டுள்ளன. அவற்றை பராமரிக்கும் பணிகளுக்கு சுமார் நூறு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பூங்கா 40 வருட காலப்பகுதியில் இலங்கைக்கு சொந்தமான பறவைகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக புலம்பெயர்ந்த பறவைகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. விலங்கியல் மாணவர்களுக்கான கல்வி பயிற்சி நிலையம், பறவை காப்பகம், பறவைகள் தங்குமிடம் மற்றும் ஒரு தனிமைப்படுத்தல் பிரிவு என்பனவும் உள்ளன இந்த பூங்காவில் வெளிநாட்டு பறவைகளை இனப்பெருக்கம் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான அலகும், பாடசாலை மாணவர்களுக்கான கல்வி மற்றும் பொழுதுபோக்கு மையம் மற்றும் இயற்கை பறவைகள் ஆய்வு மையம் என்பனவும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!