வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய புனிதத்தைப் பேணும் வகையிலும், அதன் ஆளுகை எல்லையை மெருகூட்டும் வகையிலும் ஆலயப் பிரதேசத்தின் தெற்கு எல்லையில் – கோவில் வீதியில் அமைக்கப்பட்ட “நல்லூரன் தெற்கு வாசல் வளைவு” அலங்கார தோரண வாசல் இன்று நண்பகல் திறந்து வைக்கப்பட்டது.
இன்றைய தைப்பூச நன்நாளில், தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணிக்கு “நல்லூரன் தெற்கு வாசல் வளைவு” திறந்து வைக்கப்பட்டது. நல்லூர் – கைலாச பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி நெல்மணிகள் நிரப்பப்பட்ட பெட்டகத்தை ஏற்றிய மாட்டு வண்டி கோவில் வீதி வழியாக, நல்லூரன் தெற்கு வாசல் வளைவினூடாகச் சென்று ஆலயத்தை அடைந்தது.
யாழ்ப்பாணத்துக் கந்தபுராண கலாச்சாரத்தை எடுத்தியம்பும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட வளைவு அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.