விண் அதிரக் கோசமிட்டு விகாரையை அகற்றப் போராட்டம்!

யாழ்ப்பாணம், வலி வடக்கு – தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி பொது மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மாபெரும் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த விகாரைக்கு எதிராக பல்வேறு அச்சுறுத்தல்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று மாலை ஆரம்பமாகிய இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்தது.

விகாரைக்கு முன்பாக பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்களும் என பல நூற்றுக் கணக்கானோர் இன்று காலை முதல் திரண்டிருந்தனர்.

போராட்டம் இடம்பெறும் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு, வீதித் தடைகள் போடப்பட்டு புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரமாக இருந்தது.

பல்வேறு அச்சுறுத்தல்கள், கெடுபிடிகள், எதிர்ப்புப்களுக்கு மத்தியிலும் கறுப்பு கொடிகளுடன் பெருமளவில் திரண்ட மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“அகற்று அகற்று சட்டவிரோத விகாரையை அகற்று”, “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “இனப்படுகொலை இரானுவமே வெளியேறு”, “இந்த மண் எங்களின் சொந்தமண்”, “கண் திறந்த புத்தருக்கு மண்மீது ஆசையா?”, “எமது நிலம் எமக்கு வேண்டும்” போன்ற பல கோசங்கள் ஆர்பாட்டக்காரர்களால் எழுப்பப்பட்டன.

பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டதால் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டதால் முறுகல் நிலை ஏற்பட்டு பதற்றமான நிலைமை தோன்றியது.

எனினும், அச்சுறுத்தல்கள், எதிர்ப்புக்குகளுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் விகாரகைக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!