உயர்தரப் பரீட்சை டிசெம்பர் 03 வரை பிற்போடப்பட்டது!

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 27 ஆம் திகதி முதல் நாளை 29 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை அடுத்த வாரம் – டிசெம்பர் 03 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பரீட்சைகளை எதிர்வரும் 30 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நிச்சயமற்ற காலநிலை நிலவுவதனால் எதிர்வரும் 03 ஆம் திகதி வரை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், டிசெம்பர் 04 ஆம் திகதி முதல் அன்றைய நேர அட்டவணைப்படி பரீட்சைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, டிசம்பர் 04ஆம் திகதி முதல் பரீட்சைகள் மீள ஆரம்பிக்கப்படும். நவம்பர் 27ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 21ஆம் திகதியும், நவம்பர் 28ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 23ஆம் திகதியும், நவம்பர் 29 இற்குரிய பரீட்சை டிசம்பர் மாதம் 27ஆம் திகதியும், நவம்பர் 30ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சை டிசம்பர் 28ஆம் திகதியும், டிசம்பர் 2ஆம், டிசம்பர் 3ஆம் திகதிகளுக்குரிய பரீட்சைகள் முறையே டிசம்பர் 30, டிசம்பர் 31 ஆம் திகதிகளிலும் நடைபெறும் என பரீட்சைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாற்றப்பட்ட திகதிகளுக்குரிய திருத்தப்பட்ட நேர அட்டவணை அடுத்த வாரமளவில் அனுப்பி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!