இலங்கையில் பொது அடிப்படை வசதிகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளை நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் மன்றத்தின் பிரிதிநிதிகளுக்கும், பிரதமர் கலாநிதி ஹருணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் மன்றத்தின் இந்தியா மற்றும் தென்கிழக்காசியாவின் கொள்கை மற்றும் அரச தொடர்புகளுக்கான பிரதம பணிப்பாளர் ஹரி மேனன் தலைமையிலான குழுவினருக்கும், பிரதமர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் விசேடமாக “டிஜிட்டல் விவசாயம் ” மற்றும் “டிஜிட்டல் பொது அடிப்படை வசதிகள்” ஆகியவற்றின் மேம்பாடு குறித்து விளக்கமாகக் கலந்துரையாடப்பட்டதாகப் பிரதமரின் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:
உலகளாவிய ரீதியில் சுகாதாரம் மற்றும் போஷாக்கு, விவசாயம், நகர்ப்புற சுகாதாரம், மற்றும் மகளிர் பொருளாதாரத்தை வலுவூட்டல் தொடர்பாக பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் மன்றத்தின் செயற்பாடுகள் பற்றி பணிப்பாளர் ஹரி மேனன் இந்தச் சந்திப்பின் போது விளக்கமளித்தார். அத்துடன், டிஜிட்டல் விவசாயத் திட்டங்களுக்கான நிதிவசதிகள் மற்றும் பொது அடிப்படை வசதிகளை விருத்தி செய்வதற்கான தொழிநுட்ப ரீதியிலான ஒத்துழைப்பை வழங்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் போஷாக்குக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான விடயங்கள் குறித்தான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி பிரதமர் விளக்கமளித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் மன்றத்தின் உயர் அதிகாரிகள், பிரதமரின் செயலாளர் திரு பிரதீப் ஹபுதன்த்ரி, மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கப் பிரிவுக்கான துணைப் பணிப்பாளர் தனுஜ மீகஹவத்த ஆகியோர் கலந்து கொண்டனர்.