யாழ். மாநகர முதல்வராக ஆர்னோல்ட்?

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இ. ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அறியவருகிறது. இந்தப் பிரகடனத்தைத் தாங்கிய விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை வெளியிடப்படலாம் என்று விடயமறிந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் முதலாவது சமர்ப்பிப்பின் போது தோற்கடிக்கப்பட்டது. இதனையடுத்து முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்ததனால் வெற்றிடமாக இருந்த முதல்வர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நேற்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது 24 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தில் கூடியிருந்தனர். கூட்டத்துக்குத் தேவையான நிறைவெண் இருப்பதனால் கூட்டத்தைத் தொடர்ந்து நடாத்துவதாக உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் அறிவித்ததோடு, முதல்வருக்கான முன்மொழிவுகளைக் கோரினார்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட்டின் பெயர் முன்மொழியப்பட்டது. இதனையடுத்து முன்மொழிவை ஆட்சேபிப்பதாகத் தெரிவித்து ஈ.பி.டி.பி ஐச் சேர்ந்த எம்.ரெமீடியஸ் சபையையிலிருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறினர்.

இதனால் தெரிவைக் கொண்டு நடாத்துவதற்குத் தேவையான கோரம் இல்லாத காரணத்தனால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், தெரிவுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு நியாயமற்றது என கூட்டத்தில் கலந்து கொண்ட 20 உறுப்பினர்கள் தமது எழுத்து மூல ஆட்சேபனையை உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.  இது தொடர்பில் ஆளுநர் தலைமையில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர்களில் ஒருவரும் கூடி ஆராய்ந்ததாகவும், அதன் பின் யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இ. ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட உத்தரவிட்டுள்ளதாகவும் ஆளுநர் செயலக வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்தது.

2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66(எ) பிரிவின் கீழ், நேற்று 19.01.2023 வியாழக்கிழமையன்று நடாத்தப்பட்ட தெரிவின் மூலம், முன்மொழியப்பட்ட படி இ. ஆர்னோல்ட்  யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்படுவதற்கான விசேட வர்த்தமானி வெளியீட்டுக்கான குறிப்பு வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தினால் அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. இந்த அறிவித்தல் அனுப்பப்படுவதை வடக்கு மாகாண ஆளுநரும், முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர் ஒருவரும் நேரடியாக நெறிப்படுத்தியதாகவும் மேலும் அறியவருகிறது.

எனினும் இந்தச் செய்தியை வடக்கு ஆளுநர் தரப்பிலிருந்தோ, உள்ளூராட்சி ஆணையாளரிடமிருந்தோ உறுதிப்படுத்த முடியவில்லை.

இதேநேரம், இத்தகையதொரு அறிவித்தல் வெளிவந்தால், அதற்கு எதிராகத் தடை ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து இரண்டு கட்சிகளைச் சேர்ந்த யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் இன்றிரவு கூடி ஆராய்ந்துள்ளனர் என்ற செய்தியும் எமக்குக் கிடைத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!