காலநிலை சீரின்மையால் 12 பேர் உயிரிழப்பு : இரண்டு பேரைக் காணவில்லை : 17 பேருக்குக் காயம் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு அனர்த்தம் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இன்று காலை 10.00 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள நிலவர அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறையில் 8 இறப்புக்களும், பதுளை, புத்தளம், திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா ஒவ்வொரு இறப்பும் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு அனர்த்த சம்பவங்களினால் இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாகவும், 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 23 மாவட்டங்களில் 99 ஆயிரத்து 876 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 35 ஆயிரத்து 155 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்தத்தின் காரணமாக வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ள 8 ஆயிரத்து 678 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 717 பேர் 279 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 18 ஆயிரத்து 025 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து 290 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரத்து 708 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 95 வீடுகள் அழிந்துள்ளன.

பதுளை, கொழும்பு, கம்பஹா, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு மஞ்சள், அம்பர் மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அனுராதபுரம், புத்தளம், குருநாகல், வவுனியா, கண்டி, பதுளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று காலை 06.00 மணிக்கு திறக்கப்பட்டன. இதன் காரணமாக மகாவலி ஆறு, ஹெட ஓயா, தெதுரு ஓயா, முந்தேனி ஆறு, மல்வத்து ஓயா, கலா ஓயா மற்றும் களனி ஆறு ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, பதுளை, பொலன்னறுவை, குருநாகல், அனுராதபுரம், நுவரெலியா, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று காலை வரை வீதித் தடைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேரிடர் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக முப்படையைச் சேர்ந்த 2ஆயிரத்து 723 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!