டிஜிட்டல், பொருளாதார அலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று கடமையேற்பு!

– டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குப் பங்களிக்குமாறு அனைத்து தொழில் வல்லுநர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு!

– டிஜிட்டல் பொருளாதாரம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர் வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!!

அரசியல் அதிகாரத்தினதும், டிஜிட்டல் தொழிநுட்ப நிபுணர்களினதும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக இருக்கும் நிலையில், நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டுக்கு அனைத்துத் தொழில் வல்லுநர்களினதும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

எந்த சந்தர்ப்பத்திலும் அதற்குத் தான் ஒத்துழைப்பாக இருப்பேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

டிஜிட்டல், பொருளாதார அலுவல்கள் அமைச்சராக கடமைகளை இன்று வியாழக்கிழமை பிற்பகல் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

டிஜிட்டல் மயமாக்கல் ஊடாகப் பொருளாதார நடவடிக்கைகளின் வினைத்திறனை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டு வர முடியும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், வறுமையை ஒழித்தல், சமூக மனப்பாங்குகளை மாற்றுதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் என்பன அரசாங்கத்தின் பிரதான இலக்குகளாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அமைச்சு அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “கட்டிடங்களை நிர்மாணிப்பதனால் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தியடையாது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நிர்மாணத்துறை அமைச்சொன்று இருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு அமைச்சும் நிர்மாணப் பணிகளைத் தாங்களே மேற்கொண்டு வருகின்றன.

கடந்த வருடம் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் , பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. கட்டிட நிர்மாணங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் மாத்திரமே இடம்பெற்றது.

தொழில் அமைச்சுக்கு இரண்டு பாரிய கட்டிடங்கள் உள்ள போதிலும் இன்னும் மக்களின் வரிசை குறையவில்லை, அதற்கான தீர்வுகளை வழங்க டிஜிட்டல் மயமாக்கல் அவசியமானது” என்றார்.

மேலும், டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 15 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் டிஜிட்டல் பணியாளர்களை இரண்டு இலட்சமாக அதிகரிப்பது, முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான செயல் திட்டத்தை எதிர்வரும் 5 வருடங்களில் செயல்படுத்துவது குறித்தும் இந்த நிகழ்வின் போது கவனம் செலுத்தப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சராக பொறியியலாளர் எரங்க வீரரத்னவும் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, ஜனாதிபதியின் டிஜிட்டல் விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகரும், தகவல் தொழில்நுட்ப முகவராண்மையின் தலைவருமான ஹான்ஸ் விஜேசூரிய மற்றும் அமைச்சு அதிகாரிகள் உட்படப் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!