தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ
தலைமையிலான அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு இன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இன்று காலை நாடாளுமன்றத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேம்படுத்துதல், இலங்கையின் பொருளாதார சவால்களை எதிர்கொள்வது, கல்வி மற்றும் நிர்வாக ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வது குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புமிக்க செயற்பாடுகள் பற்றி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய விளக்கியதுடன், திறமையான பணியாளர்களை வளர்ப்பதற்கு பொருளாதாரத் தேவைகளுடன் கல்வி மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டினார்.
இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் சர்வதேச பங்காளித்துவங்களின் பங்கு குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவில் ஆசியாவுக்கான உதவி நிர்வாகி அஞ்சலி கபூர், அமெரிக்க திறைசேரித் திணைக்களத்தில் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் ரொபேர்ட் கப்ரோத் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோரும், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, விஜிதா பஸ்நாயக்க, மற்றும் ஷோபினி குணசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.