அரசியல் இலாபங்களுக்காக நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்விக் குறியாக்கப்படக்கூடாது என்று முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக, இலங்கை அரச புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே கைது செய்யப்பட்டமை குறித்து முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “இலங்கையில் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியாகவும் விடுதலைப் புலிகளின் புலனாய்வு வலையமைப்பைச் சிதைப்பதிலும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் உட்பட முக்கிய தலைவர்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கான புலனாய்வுச் செயற்பாடுகளைத் தலைமையேற்றுச் செயற்படுத்தியதிலிருந்து, கே.பி முதலான இரகசியச் செயற்பாட்டாளர்களைக் கைது செய்வது வரையான இரகசிய புலனாய்வு நடவடிக்கைகளை முன்னின்று செயற்படுத்தியவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே ஆவார்.
நாட்டைப் பாதுகாக்கத் தங்கள் உயிரைப் பணயம் வைத்த அதிகாரிகள் இன்றைய அரசியல் சுழற்சியின் காரணமகப் பழிவாங்கப்படுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது. உதித்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி விரைவாகக் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் விசாரணைகளின் போது அரசாங்கம் உண்மையையும் நீதியையும் பின்பற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
