யாழ். பல்கலைக்கழகத்துக்கு வெளியேயுள்ள மாணவர் விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் உள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ். ஜயமஹாவிடம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ராகிங் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், பல்கலைக்கழகத்துக்கும், கோண்டாவிலில் அமைந்துள்ள மாணவர் விடுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ராகிங் சம்பவம் தொடர்பாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, மாணவர் விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் உள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு கோரி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளரினால், யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமாரவினால் யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ். ஜயமஹாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடித்த்தில் “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஒரு ராகிங் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் ஒருரின் உறவினர்களிடமிருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் பாலின மற்றும் பாலியல் சமத்துவ மையத்துக்கு முறைப்பாடொன்று கிடைத்துள்ளது.
கனிஷ்ட மாணவர்களைத் தங்களது வாடகைத் தங்குமிடங்களுக்கு அழைக்கும் சிரேஷ்ட மாணவர்கள் கனிஷ்ட மாணவர்களைத் தாக்கித் துன்புறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அறியவருகிறது.
பல்கலைக்கழகத்துக்கும், கோண்டாவிலில் அமைந்துள்ள மாணவர் விடுதிக்கும் இடைப்பட்ட பலாலி வீதிப்பகுதில் தினமும் இரவு 10 மணி முதல் 11 மணிக்கு இடைப்பட்ட நேரத்திலையே மாணவர்கள் விடுதிகளிலிருந்து வாடகைத் தங்குமிடங்களுக்கு அழைக்கப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்தால் தாம் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தில் மாணவர்கள் எவரும் முறைப்பாடு செய்ய முன்வருகிறார்கள் இல்லை.
எனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும், கோண்டாவில் விடுதிக்கும் இடையிலான பலாலி சாலைப் பகுதியில் மாணவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், ராகிங் சம்பவங்கள் தொடர்பாக ஆராயவும், சாத்தியமான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை பொலிஸ் அணிகளை ரோந்துப் பணியில் ஈடுபடுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.” என்று குறிப்பிப்பட்டுள்ளது.
அதேநேரம், ராகிங் சம்பவங்கள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் பாலின மற்றும் பாலியல் சமத்துவ மையத்தின் 0112123700 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
