பிரதமரிடம் விடைபெற்ற ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்!

இதுவரை காலமும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராக இருந்த போல் ஸ்டீவன்ஸ், தன்னுடைய பதவிக்காலம் முடிந்து இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் வேளையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு, நேற்று ஆகஸ்ட் 4 செவ்வாய்க்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. உயர் ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர், தனது பதவிக் காலத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்புக்காக நன்றி தெரிவித்தார். இலங்கையில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டிய உயர் ஸ்தானிகர், இலங்கையின் வளர்ச்சி முயற்சிகளுக்கு ஆஸ்திரேலியாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு கிடைக்கும் என்று உறுதியளித்தார்.

இந்தக் சந்திப்பின் போது, நிறுவன ஒழுங்குகளை வலுப்படுத்துதல், முன்பு நிறுத்தப்பட்டிருந்த திட்டங்களை மீண்டும் தொடங்குதல் மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் உட்பட அரசாங்கத்தின் முன்னுரிமைகளைப் பிரதமர் விளக்கினார். இத்தகைய திட்டங்களின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்ட உயர் ஸ்தானிகர், கல்விச் சீர்திருத்தங்கள் உட்பட இலங்கையின் பல திட்டங்களுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவு கிடைக்கும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் இரு தரப்பிலிருந்தும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அவுஸ்திரேலியக் குழுவில் பிரதி உயர் ஸ்தானிகர் லலிதா கபூர், முதல் செயலாளர் (அபிவிருத்தி) சோஃபி கார்டன் மற்றும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) மேத்யூ லார்ட் ஆகியோரும், இலங்கைக் குழுவில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் கிழக்கு ஆசியப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திலோமா அபயஜீவா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!