மாத்தறை மாவட்டத்தில் உள்ள பொலீஸ் நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரைச் சித்திரவதைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பொலீஸ் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்யுமாறு பதில் பொலீஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.
வீரகெட்டிய பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தங்காலை பொலீஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி, கம்புருபிட்டி பொலீஸ் நிலையத்தின் சிறு குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரி மற்றும் மவுண்ட்லெவினியா பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலீஸ் சார்ஜென்ட் ஆகியோரே பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளாவர். சம்பந்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அவர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தில்ஷான் மதுசங்க என்ற இளைஞனைக் கைது செய்து, ஆறு நாள்கள் தடுப்புக்காவலில் வைத்துச் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பில் சிறப்புப் பொலீஸ் புலனாய்வுப் பிரிவின் விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பொலீஸ் அதிகாரிகளுக்கு மாத்தறை உயர் நீதிமன்றம் அண்மையில் பிணை வழங்கியது. தலா ரூபா 25 ஆயிரம் ரொக்கப் பிணை மற்றும் தலா ரூபா 5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஆட்பிணைகளை உயர் நீதிமன்றம் விதித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.