சோலர் இணைப்பு அனுமதியில் முறைகோடு : ஜனாதிபதி செயலகத்துக்கு மீண்டும் முறைப்பாடு!

வடக்கு மாகாணத்தில் – குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சோலர் இணைப்புக்காக இலங்கை மின்சார சபையினால் வழங்கப்படும் அனுமதியில் முறைகேடுகள் இடம்பெறுவதாக மீண்டும் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்தக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

சோலர் இணைப்புக்காக விண்ணப்பிப்பவர்களின் வரிசை ஒழுங்குக்கு முரணாக அனுமதிகள் வழங்கப்படுதல், கையூட்டுகளைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட பாவனையாளர்களுக்கு மீற்றர் பூட்டுவதில் வேண்டுமென்றே இழுத்தடிப்புச் செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வடமராட்சி – தொண்டமனாறு, நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் நால்வர் இது குறித்துத் தனித்தனியான முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் சோலர் இணைப்பு அனுமதி வழங்கலில் முறைகேடுகள் காணப்படுவதாகவும், தாம் விண்ணப்பித்த ஒழுங்கின் படி தங்களுக்கு அனுமதி வழங்கப்படாமல், தங்களுக்குப் பிறகு விண்ணப்பித்தவர்களுக்குச் செல்வாக்கின் அடிப்படையில் அனுமதிகள் வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி செயலகத்துக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மின்வலு அமைச்சராகப் பதவி வகித்த நிலைமாறு கால அமைச்சரவைக் காலத்தினுள் பாதிக்க்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக இணைப்பு அனுமதியை வழங்குமாறு யாழ்ப்பாணப் பிராந்திய மின் பொறியியலாளருக்கு மின்வலு அமைச்சின் செயலாளர் பணித்திருந்தார்.

இப்போது, தமது அனுமதி விண்ணப்பத்துக்கு அங்கீகாரம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், செல்வாக்குமிக்க ஒரு சிலருக்கு மட்டும் அதிகளவான வலுப்பாவனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த மின் பாவனையாளர்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.

இதேநேரம், சோலர் இணைப்பைப் பெற்றுக்கொண்டுள்ள சில வாடிக்கையாளர்கள் வங்கி கடன் மூலம் சோலர் தொகுதியைப் பொருத்தி பல மாதங்கள் ஆகியுள்ள போதிலும், இணைப்புக்கான மீற்றரைப் பொருத்துவதில் மின்சார சபை அசண்டையீனமாக வேண்டுமென்ற இழுத்தடிப்புச் செய்வதாகவும் இதனால் வங்கிக்கு மாதாந்தத் தவணைப் பணத்தைக் கட்டுவதற்குத் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!