கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த பகிடிவதைகள் மற்றும் பதிவான வழக்குகள் தொடர்பான விசாரணைகள் குறித்து தனித்தனியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பல்கலைக் கழகங்கள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தின் போது, பெரிய ரயர் ஒன்று படிக்கட்டுகளில் இருந்து கீழே உருட்டப்பட்டதால் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளான மாணவன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே ஆகியோரைப் பிரதிவாதிகளாக குறிப்பிட்டு மாணவனின் சகோதரி மற்றும் பாதிக்கப்பட்ட மாணவன் ஆகியோர் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்தனர். ஆயினும், சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கருத்திற் கொண்ட நீதிமன்றம், பயனுள்ள தீர்வுகளைப் பரிசீலித்து, தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க, விண்ணப்பத்தின் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்று கூறியது.
பகிடிவதை என்பது பல்கலைக்கழகக் கல்வியில் உடல், உடலியல் மற்றும் நடத்தை சார்ந்த விளைவுகளுடன் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள அனைத்து அரச பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரை இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்கல்வி அமைச்சருக்கு தேசியக் கொள்கைகள் தொடர்பான உத்தரவுகளை வழங்க அதிகாரம் உள்ளதால் அவரைப் பிரதிவாதியாக மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகிடிவதையைத் தடுக்க பல்கலைக்கழகங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கடந்த ஆண்டில் பெறப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எட்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு துணைவேந்தர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வழக்கில் தலையிட விரும்பும் அனைத்து தரப்பினரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதிக்கு முன்னர் பிரதிநிதித்துவம் செய்ய கால அவகாசம் வழங்கப்படும் என்று குறிப்பட்ட நீதிமன்று அடுத்த விசாரணையை ஓகஸ்ட் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
