அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரிக் சட்டத்துக்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் எதிர்வரும் 8 ஆம் திகதி, புதன்கிழமை அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அச் சங்கத்தின் செயலாளர் ரொகான் லக்சிறி அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான வருமானவரிக் கொள்கை எம்மை வெகுவாகப் பாதித்துள்ளது. நாட்டின் நற்பிரஜைகளாக – நாட்டின் அபிவிருத்திக்காக வரி அறவிடப்படுவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனாலும் இம் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வரிக் கொள்கை நியாயமற்றதும், முறையற்றதுமாகும். இதனால் எமது சம்மேளத்தின் உறுப்பினர்கள் பலர் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், சட்ட ரீதியாக எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும், அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் நாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். இன்று 05.02.2023 இல் மீண்டும் கூடிய எமது பிரதிநிதிகள் சபை ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி எமது உறுப்பினர்கள் பல்கலைக் கழகங்களில் நடக்கும் எந்தவொரு கூட்டத்திலும் பங்குபற்றுவதில்லை என்ற முடிவைத் தொடர்வது என்றும் எதிர்வரும் 8 ஆம் திகதி, புதன்கிழமை அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவது என்று முடிவு செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறிய அளவிலான எதிர்ப்பு நடவடிக்கைகளில் தாம் ஈடுபட முடிவு செய்திருந்தாலும், நாட்டிலுள்ள சக்தி வாய்ந்த தொழிற்சங்கங்களை ஒன்று திரட்டி மாபெரும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் குதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.