யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ. ஆனோர்ல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது எனக்கோரி, அதனடிப்படையில் அவரது பதவி நியமனம் குறித்த வர்தமானி அறிவித்தலைச் செல்லுபடியாற்றதாக அறிவிப்பதற்கும், முதல்வராக ஆனோர்ல்ட் தொடர்வதற்கு இடைக்காலத் தடையுடன் யாழ்ப்பாணம் மாநகர சபையைக் கலைக்குமாறு கோரியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (மணிவண்ணன் அணி) யின் மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபன் தொடுத்துள்ள உறுதிகேள் எழுத்தாணை (Writ of Certiorari), யாதுரிமை எழுத்தாணை (quo warranto) மற்றும் ஆணையீட்டு எழுத்தாணைக்கான ( Writ of Mandamus) மனு மீதான விசாரணை இன்று யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கடந்த மாதம் 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2315/62 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் யாழ். மாநகர சபையின் முதல்வராக இ. ஆனோர்ல்ட் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார். இந்த அறிவிப்பு சட்டத்துக்குப் புறம்பானது என்பதால்,
19.01.2028ம் திகதி முதல்வர் தெரிவை நடாத்துவது என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தினையும், 06.01.2023 அன்று வெளியிடப்பட்ட 2313/61 ம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலினையும் முற்றாக வெற்றும் வெறிதுமானது என்று பிரகடனப்படுத்தும் உறுதிகேள் எழுத்தாணை,
மீண்டும் இ. ஆர்னோல்டை மாநகர முதல்வராக நியமிக்க எடுத்த தீர்மானத்தினையும், 20.01.2023ம் திகதிய 2315/62ம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலினையும் முற்றாக வெற்றும் வெறிதுமானது என பிரகடனப்படுத்தும் உறுதிகேள் எழுத்தாணை,
20.01.2023ம் திகதிய 2315/62ம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் இ. ஆனோர்ல்டினால் இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் வெற்று வெறிதானவை என பிரகடனப்படுத்தும் உறுதிகேள் எழுத்தாணை,
இ. ஆர்னோல்ட் 20.01.2023ம் திகதியில் எவ் அதிகாரத்தின் கீழ் முதல்வராக பதவி வகிக்கின்றார் என வெளிப்படுத்த வேண்டும் என ஆணையிடும் யாதுரிமை எழுத்தாணை,
இ. ஆர்னோல்ட் தேர்தல் ஆணையகத்தின் சுற்று நிரூபத்தின்படி முதல்வராக பதவி வகிக்க தகுதிற்றவர் என்று வெளிப்படுத்தும் யாதுரிமை எழுத்தாணை,
இ. ஆர்னோல்டை யாழ் மாநகர முதல்வராக நியமித்த வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் தீர்மானங்களினதும் அவரால் வெளியிடப்பட்ட 20.01.2023ம் திகதிய 2315/62 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலினதும் செயற்பாடுகளை இடைநிறுத்தும் இடைக்காலக் கட்டளையும்
20.01.2023ம் திகதிய 2315/62 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இ. ஆர்னோல்ட் யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக செயற்படக் கூடாது என்ற இடைக்காலக் கட்டளையும்
2017ம் ஆண்டின் 16ம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்டவாறான உள்ளுராட்சி சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 66B(4)ன் பிரகாரம் ஒரு முறை மாநகர முதல்வர் பாதீடு தோற்கடிக்கப்பட்டதனால் பதவியிழந்த நிலையிலும் மற்றைய மாநகர முதல்வர் பாதீட்டை நிறைவேற்ற முடியாது பதவி துறந்த நிலையிலும் யாழ்ப்பாணம் மாநகர சபையை கலைக்க வடக்கு மாகாண ஆளுநருக்கு ஆணையிடும் ஆணையிட்டு எழுத்தாணையும் வழங்கப்பட வேண்டும் என மனுவில் வழக்காளியினால் கோரப்பட்டுள்ளன.