– நரசிம்மன் –
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக தமிழர் தேசத்தில் – வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சிங்களத் தேசியக் கட்சி ஒன்று ஓரு ஆசனத்தையாவது பெற்றுக்கொள்வது குதிரைக்கொம்பாக இருந்து வந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி என்று தம்மை உருமாற்றிக் கொண்டுள்ள ஜே.வி.பி சுளையாக ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டமை ஒரு புறநடை என்று கூடச் சொல்லலாம்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் – எதிர்வு கூறல்களுக்கு அப்பாற்பட்டு இந்த முடிவு அமைந்திருந்தது. போர் தின்ற மண்ணில், தமிழ்த் தேசியத்தின் தடத்தில் வீறுகொண்டெழுந்த தேசத்தில் திருப்புமுனையாக நடந்தேறியதுதான் நாடாளுமன்றத் தேர்தல் – 2024. இந்தத் தேர்தலிலும், இதற்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றியை அந்தக் கட்சி தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுமா என்ற பெருஞ்சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பௌத்த சிங்களப் பேரினவாதச் சிந்தனை கொண்ட தெற்கில் கால்பதித்திருப்பதை விட, வடக்கில் மிக உறுதியாகக் கால் பதித்திருப்பதை உணருகிறது. என்றுமில்லாதவாறு வடக்கின் மீது அக்கறை கொண்டாற்போல வரவு – செலவுத் திட்டத்தில் கணிசமான அளவு ஒதுக்கீடு செய்தமையும், வடக்குக்கான ஜனாதிபதியின் விஜயங்களும் தேசிய மக்கள் சக்தி தெற்கை விட வடக்கை நம்பி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
இருப்பினும், ஜனாதிபதியினதும், கட்சி உயர் பீடத்தினதும் செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் வடக்கிலுள்ள தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சியின் ஒரு சில செயற்பாட்டாளர்களும் அரசின் மீதான மக்கள் நம்பிக்கையைக் குழப்பியடித்துக் குளிர்காயத் தொடங்கியிருக்கிறார்களோ என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.
தமிழ்த் தேசியம் பேசியபடி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த கட்சிகளின் சுயநல அரசியல் போக்கின் மீதான வெறுப்பும், அனுரகுமார திசாநாயக்கா என்ற தனிமனித ஆளுமை மீதான ஈர்ப்புமே வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் மீது தமிழ் மக்கள் “குருட்டு”த்தனமான நம்பிக்கை வைப்பதற்குப் போதுமான காரணிகளாக இருந்தன.
தேசிய மக்கள் சக்தியினால் நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தப்பட்டவர்கள் எவரும் தமிழ் மக்களுக்காக எதையும் சாதித்தவர்களல்லர். தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர்கள் கூட இல்லை. ஆனாலும், தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு தங்கள் சுயலாபப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கோடு, “கண்ணை மூடிக் கொண்டு” கட்சிக்குப் போட்ட வாக்குகள் யார், யாரையோ எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கியிருக்கின்றன.
ஆனாலும், இந்த உண்மை தெரியாமல் தேசிய மக்கள் சக்தி இப்போது வடக்கில் நடந்து கொள்ளும் விதம், தங்கள் சொந்தக் கட்சிகள் மீது வைத்திருந்த வெறுப்பை விடப் பல மடக்கு வெறுப்பை ஏற்படுத்தி வருகின்றது என்ற கசப்பான உண்மையைத் தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
“ஒரு ஐந்து வருடத்துக்குத் தானே?” என்று தங்கள் சொந்த அபிலாசைகளை அடகுவைத்து மக்கள் கொடுத்த ஆணையைத் துஷ்பிரயோகம் செய்யும் வகையில், சொந்தக் காசில் சூனியம் வைப்பதைப் போன்று இந்த வெற்றியை தாரைவார்க்கும் வகையில் அந்தக் கட்சி செயற்படுகின்றதா? தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கின்றோம் என்ற பெயரில் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு முட்டுக்கொடுத்தவர்களால் திட்டமிட்டு தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி சரிவடையச் செய்யப்படுகின்றதா? போன்ற பல சந்தேகங்கள் எழத் தொடங்கியுள்ளது.
2024ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திலும், வன்னித் தேர்தல் மாவட்டத்திலும் மூன்றாம் இடத்தையே அநுரகுமார திஸாநாயக்கவால் பெற்றுக் கொள்ள முடிந்தது. அதுவும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அவர் வடக்கில் தோல்வியை எதிர்கொண்டிருந்தார். ஆனால் இரண்டு மாதங்களுக்குள் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
அதுவும், தமிழ்த் தேசியக் கட்சிகளை எல்லாம் தூக்கி விழுங்கி இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டது. இதற்கு காரணம் என்ன? திடீர் வாக்கு வங்கி அதிகரிப்பின் பின்னணி என்ன? என்று ஆராய்ந்து பார்த்தால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா மீதான நம்பிக்கை தமிழ் மக்களிடத்தில் துளிர்விட்டிருந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கையை ஜனாதிபதி அநுர மேற்கொண்டிருந்தார்.
வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசாங்க அதிபராக வேதநாயகன் பணியாற்றிய போது, கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சியில், அப்போதைய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரர் அங்கஜன் இராமநாதனால் பழிவாங்கப்பட்டிருந்தார். இதை அங்கஜன் இராமநாதன் மறுத்தாலும், சந்தேகத்துக்கிடமின்றி மக்கள் எல்லோருக்கும் இந்த உண்மை தெரியும்.
மிகச் சிறந்த – நேர்மையான நிர்வாகி என்று பெயர் எடுத்த வேதநாயகன், சலுகைகளுக்காக விலைபோகாத ஒருவர். அத்துடன் அவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி பாரம்பரியத்தில் வந்த ஒருவர். அப்படிப்பட்ட ஒருவரை வடக்கின் ஆளுநராக ஜனாதிபதி அநுரகுமார நியமித்ததன் மூலம், வடக்கு மக்களின் மனங்களில் தன்மீதான நம்பிக்கையை பல மடங்கு உயர்த்தினார். இதனை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா கூட, வேதநாயகனை ஆளுநராக நியமித்தன் மூலம் தேசிய மக்கள் சக்தி வடக்கில் தனது வாக்கு வங்கியை சடுதியாக அதிகரித்தது என்று பல முறை தனது மேடைப்பேச்சுகளில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் நவக்கிரகங்கள் போல ஆளுக்கொரு திசையில் நின்றமையும், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களின் வாக்குவங்கிச் சரிவில் செல்வாக்குச் செலுத்தியது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கைவிட்டு அரசியல் தீர்வு என்ற ஒற்றைப் புள்ளியை மையப்படுத்தி தங்கள் பரப்புரை வியூகங்களை வகுக்க, அடிப்படை பிரச்சினைகளைப் பற்றி பேசிய மருத்துவர் அர்ச்சுனாவும், தேசிய மக்கள் சக்தியினரும் இலகுவாக வெற்றியைப் பெற்றுக் கொண்டனர்.
சமகாலத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் நிலவிய சிறீதரன் – சுமந்திரன் பனிப்போரும் தாக்கத்தை செலுத்தியதையும் ஏற்றுக் கொண்டாகவேண்டும். இதற்கு மேலதிகமாக, கடந்த காலங்களில் சிங்களத் தேசியக் கட்சிகளின் முகவர்களாகக் களமிறங்கிய டக்களஸ், அங்கஜன் போன்றவர்களை ஆதரித்த தமிழ் மக்களும் இம்முறை தேசிய மக்கள் சக்தியினரை – ஆளும் கட்சியினரை நேரடியாக ஆதரிக்க முடிவு செய்தமையும் செல்வாக்கைச் செலுத்தியது எனலாம். இப்படிப் பல காரணங்கள் ஒன்று சேர்ந்து முகம் அறியாத தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாகியது.
இந்த வெற்றிகளின் பின்னால் மறைமுக காரணி ஒன்றும் இழையோடுகின்றது. அதாவது வடக்கின் அரசாங்க உத்தியோகத்தர்களின் தீர்மானம், மக்களிடத்தில் செல்வாக்குச் செலுத்தக் கூடியது. எந்தவொரு தேர்தலிலும், அரசாங்கப் பணியாளர்கள் யாரை ஆதரிக்கின்றனரோ அதே தரப்பையே மக்கள் ஆதரித்திருந்தனர் என்பது வரலாறு. வடக்கில் நடந்த எந்தத் தேர்தலும் இதிலிருந்து விதிவிலக்கானது அல்ல.
ஊழல் – அரசியல் தலையீடு – தவறிழைத்த அதிகாரிகளுக்கான பதவி உயர்வு என கடந்த அரசாங்கங்களின் காலத்தில் அவர்களுக்கு ‘கூஜா’ தூக்கியவர்கள் மீதான வெறுப்புணர்வால், கணிசமான அரசாங்க அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தது மாத்திரமல்லாது, மக்களையும் ஆதரிக்கத் தூண்டியியுமிருந்தனர்.
வெற்றி பெறுவதைவிட அதை தக்க வைப்பது முக்கியம். இந்த இடத்தில்தான் தேசிய மக்கள் சக்தி சறுகத் தொடங்குகின்றதா என்று எண்ணத்தோன்றுகின்றது. முன்னொருபோதும் சாத்தியப்படாத வெற்றியை வடக்கு மக்கள் வழங்கியபோதும், அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பின்னடிப்பதானது, வெற்றியை கொடுத்த வேகத்தில் மக்கள் பிடுங்கி எடுத்துவிடுவார்கள் என்ற அபாயத்தை உணராத செயற்பாடாகவே இருக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வலி. வடக்கில் மக்களின் கோரிக்கையாக இருந்த 1.5 கிலோ மீற்றர் நீளமான பாதை பயன்பாட்டுக்கு மாத்திரம் விடுவிக்கப்பட்டது. இது மக்களிடத்தில் வரவேற்பை பெற்றது. எதிர்காலத்தில் தமது காணிகள் விடுவிக்கப்படும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து மூன்று மாதங்கள் நிறைவடையும் நிலையில் ஒரு துரும்புகூட நகராத நிலையில், மற்றைய சிங்கள ஆட்சியாளர்களைப் போல் தான் தேசிய மக்கள் சக்தியினரும் என்ற எண்ணத்தை உருவாக்கத் தொடங்கியிருக்கின்றது.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியக்கூடியதாக, தங்கள் பதவிகளுக்காக சிறிதர் தியேட்டருக்கும், நல்லூர் கோவில் பின்வீதிக்கும் அலைந்து திரிந்தவர்கள், அவர்களுக்காக எதையும் செய்தவர்கள் இப்போது தேசிய மக்கள் சக்தியினருடன் ஒட்டிக்கொண்டுள்ளனர். தியேட்டரிலிருந்தும், நல்லூர் கோவில் பின் வீதியிலிருந்தும் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பெயர்ப் பட்டியலுக்கு உதவிகளை வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களை நடுத்தெருவில் விட்ட உயர் அரச அதிகாரிகளும் தேசிய மக்கள் சக்தியினரின் வாலைப் பிடித்துக்கொண்டு இப்போது தொங்குகின்றனர்.
தேசிய மக்கள் சக்திக்கு இது தெரியாது விட்டாலும், மக்களுக்கு இப்படியானவர்கள் யார் என்பது தெரியும். காலத்துக்குக் காலம் கட்சி தாவும் நேர்மையற்ற இத்தகைய நபர்கள் மீதான அதிருப்தி தான் தேசிய மக்கள் சக்தி மீதான விருப்பாக மாறியிருந்தது. ஏனெனில், இப்படியானவர்கள் தங்கள் வயிற்றை வளர்ப்பதையும், தாங்கள் அதிகாரத்தை வைத்திருக்கவுமே விரும்பினர். அவர்கள் எத்தகைய பிழையான விடயங்களையும் செய்யத் தயாராக இருந்தனர்.
இப்படியான ஆதரவாளர்களை வைத்திருந்தமையும், தியேட்டர்காரரையும், நல்லூர் பின் வீதிக்காரரையும் மக்கள் வெறுக்கக் காரணமாக இருந்தது. அப்படி மக்கள் வெறுத்த நபர்கள் எல்லாம் இப்போது தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் முகாமிட்டிருக்கின்றனர்.
குறிப்பாக அரச நிர்வாகத்தில் வடக்கில் இன்னமும் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களில் மாவட்ட உயர்நிலை மற்றும் இரண்டாம் நிலைகளில் உள்ள அதிகாரிகள் தொடர்பில் மக்களிடத்தே நிறைய அதிருப்திகள் வெளிப்படையாகவே உண்டு. கடந்த கால ஆட்சியாளர்களுடன் சேர்ந்து, காணிகள் பிடித்தமை, அரச அபிவிருத்தித் திட்டங்களில் தரகுப் பணம் பெற்றமை, மக்களுக்கான நிவாரணங்களில் ‘டீல்’ பேசி கோடிக்கணக்கான பணம் சுருட்டியமை என்று இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் பட்டியல் நீண்டு செல்கிறது.
இப்படியாக ஊழல் செய்தவர்களும், மோசடி செய்தவர்களும் இன்னமும் பதவியில் தொடர அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகக் குறைந்தது அவர்களுக்கு எதிராக விசாரணைகளும் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக இவர்கள் தற்போது தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஒட்டி உறவாடுகின்றனர். தேசிய மக்கள் சக்தியினரும் அவர்களை அரவணைத்துச் செல்கின்றனர் என்பதை நேரடியாகக் காணும் போது மக்களுக்குக் கட்சியின் மீதான நம்பிக்கை குறைவடைவடைந்துள்ளது.
இது வடக்கில் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்த அரசாங்கப் பணியாளர்களிடத்தில் விரக்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. விரக்திக்கு அப்பால் அவர்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரவேண்டும் என நேர்மையாக விரும்பிய – அதற்காக மக்களை ஆதரிக்கத் தூண்டிய அரசாங்க அதிகாரிகள் இன்று தேசிய மக்கள் சக்தியால் கைவிடப்பட்டுள்ளனர் என்று எண்ணுகின்றனர். தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கடந்த தேர்தல்களின் போது பணியாற்றியவர்கள் இப்போது தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்களாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் தூக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஏமாற்றமடைந்த அரசாங்கப் பணியாளர்கள் எதிர்வரும் தேர்தல்களில், ‘யூ- ரேன்’ எடுப்பதற்கே நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. அது நிச்சயமாக மக்களிடத்திலும் எதிரொலிக்கும். ஏனெனில் தேசிய மக்கள் சக்தியோடு தற்போதுள்ள எந்தவொரு அரசாங்க உயர் அதிகாரிக்கும், மக்களிடத்தில் செல்வாக்கு இல்லை. மாறாக மக்களிடத்தே அதிருப்திதான் உண்டு. அப்படிப்பட்டவர்களை கூட வைத்துக்கொண்டு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வதென்பதென்பது தேசிய மக்கள் சக்திக்கு ஒரு விஷப் பரீட்சைதான்.
ஒட்டுமொத்த நாடும் தேசிய மக்கள் சக்தியோடு நிற்கின்ற தோற்றம் உருவாகுவதற்கு வடக்கு மக்களே பிரதான காரணம். கடந்த காலத் தேர்தல்களிலும் தெற்கு மக்கள் சிங்களத் தேசியக் கட்சிகளோடு நின்றாலும்,வடக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுடனேயே நின்றிருந்தனர். அந்த வரைபடத்தை மாற்றியமைத்த தேசிய மக்கள் சக்தி, சிறிது காலத்திலேயே அந்தப் பெரு வெற்றியை இழக்கப் போகின்றதா? இல்லை ‘கிளீன் சிறிலங்கா’ வின் கீழ் தம்மோடு ஒட்டிக்கொண்டுள்ள ‘ஒட்டுண்ணிகளை’க் கழற்றிவிட்டு வெற்றியைத் தொடர்ந்தும் தக்க வைக்கப்போகின்றதா? வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரைக் காத்திருப்போம்..