யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர நாள் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக அழைப்பு விடுத்துள்ள போதிலும், நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ரெலோ மற்றும் புளொட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் தனது கொள்கை விளக்கவுரை முடிந்த பின்னர் இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோருடன் கலந்துரையாடினார். இதன்போது, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சுதந்திர நாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அத்துடன் தனது யாழ்ப்பாணப் பயணத்தின்போது புத்திஜீவிகள் குழுவுடனும் சந்திப்பு நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாளை மாலை இடம்பெறவுள்ள சுதந்திர நாள் நிகழ்வை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகள் புறக்கணிக்கவுள்ளன என்று தெரியவருகிறது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் நேரடியாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையின் 75ஆவது சுதந்திர நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் நாளை மாலை இடம்பெறவுள்ளன. இதில் கலந்துகொள்ளுமாறு வடக்கைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி என்பனவற்றின் நிலைப்பாடு நேற்று வரை தெரியவரவில்லை.