அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடாத்துவதற்கு முன்னேற்பாடாக அரசாங்க அச்சகத்துக்கு 40 மில்லியன் ரூபாவை திறைசேரி நேற்று முன்தினம் விடுவித்துள்ளது. இதனையடுத்து தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டு அச்சிடும்பணி ஆரம்பமாகியுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அச்சு வேலைகளைச் செய்தமைக்காக அரசாங்க அச்சகத் திணைக்களத்துக்கு 45 மில்லியன் ரூபா தேர்தல்கள் திணைக்களம் வழங்க வேண்டியிருந்தது. நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்காமல் தேர்தல்கள் திணைக்களத்தின் அச்சிடும் பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என்று அரச அச்சக திணைக்களம் அறிவித்திருந்தது. இதனால் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் உட்பட அச்சிடும் பணிகள் இழுபறியில் இருந்தன.
தபால்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிட்டு இன்று அல்லது நாளைய தினத்துக்குள் தேர்தல்கள் திணைக்களத்துக்கு ஒப்படைக்க வேண்டியிருந்தது. இந்தப் பணிகள் தாமதமடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திறைசேரியால் 40 மில்லியன் ரூபா அரசாங்க அச்சகத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்துத் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.