இலங்கை ஒரு பௌத்த நாடு. மகாசங்கத்தினருடன் மோத முடியாது. பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள சக்திகள் எதிர்க்கும் விடயத்தை செய்யவும் முடியாது. எனவே, வடக்கு அரசியல் தலைவர்கள் சமஷ்டியில் தொங்கிக் கொண்டிருக்காது நடுநிலைப் போக்குக்கு இறங்கி வர வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, எனக்கு முன்னர் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சமஷ்டி வேண்டும் எனக் கூறினார். அவரின் இந்த அறிவிப்பு சிங்கள மக்களையும், பௌத்த தேரர்களையும் கொதிப்படைய வைக்கக் கூடியது. அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அப்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் ஜே.ஆர். ஜயவர்தன கொண்டு வந்திருந்தாலும் அதன் பின்னர் அவரோ அல்லது நான் உட்பட ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்களோ அதில் கைவைக்கவில்லை. ஏனெனில் சிங்கள, பௌத்த மக்களை பகைத்துக் கொண்டு செய்ய முடியாது என்பது தெரியும். எனினும், தற்போதைய ஜனாதிபதி ஏன் கைவைத்துள்ளார் என்பது தெரியவில்லை.
இந்த நாட்டில் பிக்குகள் எதிர்க்கும் விடயத்தை ஒரு போதும் செய்ய முடியாது. அதனால் தான் செல்வநாயகம் – பண்டாரநாயக்க உடன்படிக்கை கூட கொளுத்தப்பட்டது. மகாசங்கத்தினருடன் மோத முடியாது. இது பௌத்த நாடு. சிங்கள சக்திகளையும், பௌத்த பிக்குகளையும் பகைத்துக்கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.
நான் ஜனாதிபதியாக இருந்தபோது வடக்கில் 95 சதவீத காணிகளை விடுவித்தேன். மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை சிறந்தது. வடக்கு அரசியல் தலைவர்கள் முழு இறாத்தல் இறைச்சியும் வேண்டும் என்று நிற்காமல், நடுநிலைப் போக்குக்கு வரவேண்டும், என்றார்.