தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்க இந்தியா கரிசனை செலுத்த வேண்டும் : இந்து மாமன்றம் கோரிக்கை!

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத தமிழர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா துரிதமாக செயற்பட வேண்டும் என்றும், இந்தியாவின் இணை அமைச்சர் கலாநிதி எல். முருகன் மற்றும் இந்திய அரசுக்கு நெருக்கமான பிரமுகர் எஸ். அண்ணாமலை ஆகியோர் நேரடியாக யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கின்ற போது விடுவிக்கப்படாத காணிகள், தீர்க்கப்படாத தமிழர்களின் பிரச்சினைகளை இந்திய பிரதமருக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் ஆறு. திருமுருகன் இந்த வேண்டுகோளை விடுத்தார். இந்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத தமிழர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா துரிதமாக செயற்பட வேண்டும்.

இருநூறு வருடங்கள் இலங்கை பொருளாதாரத்துக்கு உழைத்த மலையக மக்களுக்கு ஒரு துண்டு காணியில்லை. அவர்கள் தற்போதும் அடிமை வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இந்தியா உதவ வேண்டும். இந்துக்களின் புனித ஆலயமான திருக்கோணேச்சரம் இலங்கைக் கடற்படை ,தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகிறது. நீண்ட காலமாகச் செய்யப்படாத திருக்கோணேச்சரத்தின் திருப்பணியை இந்தியா செய்யவேண்டும்.

திருக்கோணேச்சர ஆலயம் அருகே பெட்டிக்கடை போட்டு நிரந்தர கட்டடம் அமைக்க முயற்சிக்கப்படுகிறது. இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பிய போதும் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. இது தொடர்பாகவும் இந்தியா கரிசனை செலுத்த வேண்டும் – என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!