– நரசிம்மன் –
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் அதன் முதலாவது வாசிப்பின் போது தோற்கடிக்கப்பட்ட கையோடு, அதன் இரண்டாவது வாக்களிப்பை நடாத்தாமல் அப்போதைய முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தனது பதவியில் இருந்து விலகியதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு எஞ்சியுள்ள அதன் ஆயுட்காலம் வரை புதிய – இடைக்கால முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான தெரிவு நாளை – ஜனவரி 19 ஆம் திகதி, வியாழக் கிழமை நடைபெறவுள்ளது.
இந்தத் தெரிவின் மூலம் யார் முதல்வராகத் தெரிவாகப் போகிறார் என்பது பலத்ததொரு எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருக்கிறது. தெரிவில் போட்டியிடப் போவதாக எதிர்பார்க்கப்படும் இருவரும் முன்னாள் முதல்வர்கள். ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர், வரவு செலவுத் திட்டம் இரண்டு சமர்ப்பிப்புகளிலும் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாகப் பதவி விலகி, பின்னர் இடம்பெற்ற முதல்வர் தெரிவில் ஒரு வாக்கினால் முதல்வராகும் வாய்ப்பை இழந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னல்ட், இரண்டாமவர் கடந்த வருடம் சபையின் முதல்வராக இருந்து முதலாவது வாசிப்பின் போது தோற்கடிக்கப்பட்ட கையோடு, அதன் இரண்டாவது வாக்களிப்பை நடாத்தாமல் பதவி விலகிய சட்டத்தரணி மணிவண்ணன். 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிராத நிலையில், எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் வலு இல்லாத நிலைமையே காணப்படுகிறது. இந்நிலையில், தற்போதைய கணக்கின் படி தலா 10 உறுப்பினர்களை மட்டுமே தம் பக்கம் கொண்டிருக்கும் வேட்பாளர்கள் இருவரும் எவ்வாறு பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார்கள் என்பது கேள்விக் குறியானதொரு விடயமாகவே உள்ளது.
இருவரும் முன்னர் ஆட்சி அமைத்துக் கொண்ட வேளைகளில், இருவருமே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடனேயே ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்த கையோடு, உள்ளூராட்சி ஆணையாளரால் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காக நடாத்தப்பட்ட தெரிவின் போது, இலங்கைதத் தமிழரசுக் கட்சி சார்பில் இம்மானுவல் ஆர்னல்ட்டும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் விஸ்வலிங்கம் மணிவண்ணனும், ஈ.பி.டி.பி யின் சார்பில் முடியப்பு ரெமீடியசும் முதல்வர் பதவிக்காக முன்மொழியப்பட்டனர். முதற்சுற்று வாக்கெடுப்பின் போது இம்மானுவல் ஆர்னல்ட்டும், முடியப்பு ரெமீடியசும் முன்னிலை பெற, குறைந்த வாக்குகளைப் பெற்ற விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவிலிருந்து விலக்கப்பட்டார். இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது, ஈ.பி.டி.பி யின் முதல்வர் வேட்பாளர் முடியப்பு ரெமீடியஸ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டார்.
அவரது தெரிவின் பின் – அவரது ஆட்சிக் காலத்தில் தாம் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்ற குற்றச் சாட்டை முன்வைத்து வந்த ஈ.பி.டி.பி, ஏற்கனவே ஆனோர்ல்ட்டின் ஆட்சியை எதிர்த்துக்கொண்டிருந்த தமிழத் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து காலம் பார்த்துக் கழுத்தறுத்தது. சபையில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதாயினும், தமக்கு இசைவில்லாத ஆட்சியைக் கவிழ்ப்பதாயினும் தம்முடைய பங்கில்லாமல் செய்து விட முடியாது என்ற இறுமாப்புடன் இருந்த ஈ.பி.டி.பி 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற வரவு – செலவுத் திட்ட சமர்ப்பணங்களின் போது ஆர்னோல்ட்டை எதிர்ப்பதற்கும், புதிய முதல்வர் தெரிவின் போது மணிவண்ணனை வெற்றி பெறச் செய்வதற்கும் வாக்களித்துத் தனது பலத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.
முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட் டைப் போலவே, அடுத்து வந்த முதல்வர் மணிவண்ணனும் தங்களுடைய தாளத்துக்கு ஆடவில்லை என்று குற்றஞ்சாட்டிய ஈ.பி.டி.பி 2022 ஆம் ஆண்டு டிசெம்பர் 21 ஆம் திகதி நடந்த 2023 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு – செலவுத் திட்ட வாக்களிப்பின் போது முதலாவது சமர்ப்பிப்பிலேயே முதல்வர் மணிவண்ணனின் காலை வாரி விட்டது. முதலாவது வாக்களிப்பில் எதிர்த்து, சமரசங்களின் பின்னர் ஆதரவளிப்பது ஈ.பி.டி.பியின் வழக்கமாக இருந்ததனால், இரண்டாவது சமர்ப்பிப்பின் போது ஈ.பி.டி.பி மணிவண்ணனை ஆதரிக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஆனால் தனது அரசியல் எதிர்காலம் குறித்த தீர்க்க தரிசனமான நிலைப்பாட்டின் காரணமாக அப்போதைய முதல்வர் வி. மணிவண்ணன் உடனடியாகத் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஏற்கனவே உள்ளூராட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், மீண்டும் ஈ.பி.டி.பி யுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்க முனைந்தால் அது தனது அரசியல் எதிர்காலத்துக்கான ஆப்பாக அமையும் என்பதை நன்கு அறிந்திருந்த மணிவண்ணன் மீண்டும் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து, ஈ.பி.டி.பி ஆதரவுடன் அதனை நிறைவேற்றி, “ஈ.பி.டி.பி முதல்வர்” என்ற முத்திரையோடு வரவிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தலில் “அரசியல் தற்கொலை” செய்வதைத் தவிர்த்துக் கொண்டார்.
(தொடரும்)