அரசாங்க அதிகாரிகள் அரச செலவில் கடமை நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அதிசொகுசு வணிக வகுப்பில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் அரச நிதியில் கடமை நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் அதிகாரிகள் சிக்கன வகுப்பு பயணத்தை மட்டுமே மேற்கொள்ள முடியும்.
வணிக வகுப்பில் பயணம் செய்ய விரும்புவோர், சிக்கன வகுப்புக்கு மேலதிகமாக வரும் செலவைத் தனது சொந்தப் பணத்தில் செலுத்த வேண்டும். அத்துடன் அரச செலவில் வணிக வகுப்பில் பயணம் செய்ய உரித்துடையவர்கள் எவராவது அவ்வாறு வணிக வகுப்பில் பயணம் செய்வதற்கு முன்னர் ஜனாதிபதியின் செயலாளரின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கு இந்தக் கட்டுப்பாடு ஏற்படையதாகாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் நிதிச் சிரமங்கள் காரணமாக அரச நிதி அத்தியாவசிய பணிகளுக்காக மாத்திரம் – மிகச் சிக்கனமாகச் செலவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆணைக்கமைய இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் ஈ. எம். எஸ். பி. எக்கநாயக்கா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர், சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், சகல மாகாண சபைகளினதும் பிரதம செயலாளர்கள், மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோருக்கு ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“கடமைசார் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக விமான சீட்டுக்களைக் கொள்வனவு செய்தல்” என்ற தலைப்பிலான அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு:
01. தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் நிதிச் சிரமங்கள் காரணமாக அரச நிதியங்கள் அத்தியவசிய பணிகளுக்காக மாத்திரம் மிகச் சிக்கனமாக செலவு செய்யப்படல் வேண்டும்.
02. அதன் பிரகாரம், கடமைசார் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களுக்கான விமானச் சீட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்காக அரச நிதியங்கள் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் கௌரவ பிரதம நீதியரசர், கௌரவ உயர் நீதிமன்ற நீதிபதிகள், கௌரவ மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் மற்றும் கௌரவ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து உத்தியோகத்தர்களும் சிக்கன வகுப்பு (Economy Class) விமானச் சீட்டுக்களை மாத்திரம் கொள்வனவு செய்தல் வேண்டுமென மாண்புமிகு சனாதிபதியவர்களின் ஆணைப்படி தயவுடன் அறியத் தருகின்றேன்.
03 எவரேனும் உத்தியோகத்தர் ஒருவருக்கு வணிக வகுப்பில் (Business Class) பிரயாணம் செய்யத் தேவையெனில், சிக்கன வகுப்பின் விமானச் சீட்டு ஒன்றை கொள்வனவு செய்வதற்குச் செலவாகும். தொகைக்கும், வணிக வகுப்பின் விமானச் சீட்டு ஒன்றை கொள்வனவு செய்வதற்குச் செலவாகும் தொகைக்கும் இடையிலான வித்தியாசத் தொகையினைத் தனது சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்து வணிக வகுப்பில் பிரயாணம் செய்ய முடியும்.
04. எவரேனும் உத்தியோகத்தர் ஒருவருக்கு மேற்குறித்த ஏற்பாடுகளுக்குப் புறம்பாக விசேட காரணத்துக்காக அரச நிதியத்தைப் பயன்படுத்தி வணிக வகுப்பில் பிரயாணம் செய்யத் தேவையெனில் அது தொடர்பான போதியளவு விடயங்களை முன்வைத்து எனது முன் அனுமதியினைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
05. இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் 2023 மார்ச் மாதம் 01 ஆம் திகதி முதல் செயல்வலுப் பெறுவதுடன், அதன் பிரகாரம் இந்த விடயம் தொடர்பில் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் அல்லது அறிவுறுத்தல் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் 2023 மார்ச் மாதம் 01 ஆம் திகதி முதல் வலுவிழக்கும்.
06. இது தொடர்பாக உங்களது அமைச்சு/ மாகாண சபை / நிறுவனத்தின் கீழ் உள்ள சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனத் தலைவர்களை அறிவூட்டுமாறு மேலும் அறியத் தருகின்றேன் – என்றுள்ளது.
