பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தந்த போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரால் தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அத் தடைகளை மீறி, ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்நுழைய முற்பட்டனர். அந்த நேரத்தில் பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டர். அந்த இடத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என குற்றம் சாட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகள் இன்று புதன்கிழமை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் உட்படப் பலரைக் கைது செய்வதற்குப் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.