யாழ். மாநகர சபை முதல்வர் போட்டியின்றித் தெரிவாகும் வாய்ப்பு? (பாகம் 2)

– நரசிம்மன் –

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எஞ்சியுள்ள அதன் ஆயுட்காலம் வரை புதிய – இடைக்கால முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான தெரிவு நாளை – ஜனவரி 19 ஆம் திகதி, வியாழக் கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தெரிவின் மூலம் யார் முதல்வராகத் தெரிவாகப் போகிறார் என்பதைப் பற்றி ஆராய்வதற்காக எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் முதலாவது பாகத்தில் கடந்த கால முதல்வர் தெரிவுகளின் போது நடந்தவை பற்றி விரிவாக ஆராய்ந்திருந்தோம்.

இனி, நாளை நடக்கப்போகின்ற முதல்வர் தெரிவில் என்ன நடக்கப் போகிறது? யார் முதல்வராகத் தெரிவு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன? என்பது பற்றிப் பார்ப்போம்.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிராத நிலையில், எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் வலு இல்லாத நிலைமையே காணப்படுகிறது. இந்நிலையில், தற்போதைய கணக்கின் படி தலா 10 உறுப்பினர்களை மட்டுமே தம் பக்கம் கொண்டிருக்கும் வேட்பாளர்கள் இருவரும் எவ்வாறு பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார்கள் என்பது கேள்விக் குறியானதொரு விடயமாகவே உள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரை கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்ட 16 உறுப்பினர்களும் கட்சியினால் முன்மொழியப்படவிருக்கின்ற முதல்வர் வேட்பாளர் இம்மானுவல் ஆர்னோல்டுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பப்படுகிறது. ஆனால் அந்த நம்பிக்கை சில வேளைகளில் வீண் போவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பேசப்படுகிறது.

2018 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக” ஒன்றிணைந்து நின்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளின் கூட்டில் இப்போது தமிழரசு தனியாகவும், ரெலோ, புளொட் ஆகிய இரண்டு கட்சிகளும் புதியதொரு கூட்டிலுமாகப் பிரிந்து போயிருக்கின்றன. 10 தமிழரசு உறுப்பினர்களையும், 03 ரெலோ உறுப்பினர்களையும், 03 புளொட் உறுப்பினர்களையும் கொண்டிருந்த கூட்டில் இப்போது தமிழரசுக் கட்சியின் 11 பேரும், ரெலோ வின் ஒரு பெண் உறுப்பினரும் மட்டுமே அடித்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஆனோர்ல்ட்டை ஆதரிக்கும் நிலையில் இருக்கின்றனர். இவர்களில் கூட ஒரு சிலர் எதிர்ப்பு மன நிலையுடனேயே காணப்படுகின்றனர்.  ஏற்கனவே தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளரைத் தெரிவு செய்வது தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது தாம் வெற்றி பெற்ற வட்டாரங்களில் தம்மைப் போட்டியிட அனுமதிக்காத அல்லது, கடந்த முறை வெற்றி பெற்ற போதிலும் இம்முறை வாய்ப்புக் கொடுக்கப்படாமையுமே இந்த எதிர்ப்பு மன நிலைக்குக் காரணமென அறிய முடிகிறது. ஆனாலும் சபையின் ஆயுட்காலம் முடியும் தறுவாயில், கட்சித் தலைமையைப் பகைத்துக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை.

அதே நேரம், தமிழரசை விட்டுத் தனித்துப்போய்க் குத்துவிளக்குக் கூட்டணியில் இருக்கும் உறுப்பினர்கள் ஐந்து பேரில், புளொட்டைச் சேர்ந்த மூன்று பேர் வாக்கெடுப்பின் போது நடுநிலைத் தீர்மானத்தை எடுக்கவிருக்கின்றனர் என்றும் அறியக் கிடைத்தது.  முதல்வர் தெரிவில் போட்டியிடப் போகின்ற இரு முன்னாள் முதல்வர்களும், அவர்களுக்கு வலைவீசி வாக்குறுதிகளை அள்ளி வீசியிருப்பதாகவும் தகவல் உண்டு. ஆனாலும், அவர்கள் சார்ந்துள்ள இரு கட்சிகளும் யாழ். மாநகர சபையைப் பொறுத்தளவில் வீட்டுச் சின்னத்திலேயே போட்டியிட்டுத் தெரிவானவர்கள் என்பதால், சபையின் ஆயுட்காலம் முடியும் வரை அந்த நிலைப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளின் தலைமைகள் அவர்களுக்குக் கட்டளை வழங்கியிருப்பதால், தாம் சார்ந்த கட்சித் தலைமைக்குப் பணிந்து அவர்கள் ஆனோர்லட்டுக்குச் சார்பான நிலைப்பாட்டையே எடுப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.

இது இப்படியிருக்க, எப்போதும் மணிவண்ணன் தரப்புக்கு எதிராகவே செயற்பட்டுவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் மூவர், மணிவண்ணனை எதிர்க்கும் மனநிலையில் இருந்தாலும், முன்னைய காலங்களில் – சபை நடவடிக்கைகளின் போது ஆனோல்ட்க்கு எதிராக : தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே செயற்பட்டு வந்த காரணத்தினால் பகிரங்கமாக ஆனோல்ட்டை ஆதரிக்கும் நிலையிலும் இல்லை. ஏனெனில் இம்முறை ஆனோல்டுக்கு ஆதரவாகச் செயற்படுவார்களானால், அவர்கள் கடந்த காலங்களில் அவர்கள் ஆனோல்ட்டுக்கு எதிராகச் செயற்பட்டமை பிழை என்ற கொள்கை முரண்நிலை ஒன்று தோன்றி, அது வரப்போகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று கருதப்படுகிறது.  ஆனாலும் அவர்களின் ஆதரவு இல்லாமலே ஆனோல்ட் வெற்றி பெறும் வாய்ப்பே அதிகமாகக் காணப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இவை தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர் ஆனோல்ட்டை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருக்க மீதமுள்ள இரண்டு பேரும் மதில் மேற் பூனைகளாக வெற்றி வேட்பாளர் பக்கம் பாய்வதற்காகச் சந்தர்ப்பம் பார்த்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அத்துடன், உட்கட்சிப் பூசல் காரணமாக ஈ.பி.டி.பி யில் இருந்து வெளியேறியிருக்கின்ற ஐந்து உறுப்பினர்களில் மூவர் தமிழரசுக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படலாம் எனவும் அறியக்கிடைத்தது.

மறுபுறத்தில் 10 உறுப்பினர்களை மட்டும் தன்னுடன் வைத்திருக்கும் முன்னாள் முதல்வர் மணிவண்ணன், தன்னுடைய அணியின் உறுப்பினர்களை விட மேலும் 4 பேரை மட்டுமே மேலதிகமாகச் சேர்க்கும் வாய்ப்பைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மணிவண்ணன் அணி முதல்வர் போட்டில் இருந்து விலகும் நிலை ஒன்று தோன்றியிருக்கிறது.

ஆனாலும், சில சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி, சபையைப் போதிய நிறைவெண் (கோரம்) இல்லாமல் செய்து முதல்வர் தெரிவைப் பிற்போடச் செய்வதற்கும், தெரிவைச் சட்ட ரீதியாகச் சவாலுக்கு உட்படுத்துவதற்கும் இரு கட்சிகள் கூட்டுத் திட்மொன்றைக் கடைசி நேரத்தில் அரங்கேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை அறிய முடிந்தது. மாற்று அணிகளின் திட்டத்துக்கு மாற்றுத் திட்டமாகப் போதிய நிறைவெண்ணை உறுதிப்படுத்தும் முயற்சியில் தமிழரசுத் தரப்பு ஈடுபட்டுள்ளது.

எது எப்படியிருப்பினும், யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட் போட்டியின்றித் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களே பிரகாசமாகத் தென்படுகின்றன என்கின்றனர் அவதானிகள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!