யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் ஒருவரை, சட்டத்தரணி ஒருவர் தனது காரில் ஏற்றிவந்து பொலீஸாரிடம் பாரப்படுத்திய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு ஞானபண்டித வித்தியாசாலை அருகில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவரின் விரல்கள் துண்டாடப்பட்டதுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்துப் பொருத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலீஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், சந்தேக நபர்கள் மறைந்திருந்த இடத்தை யாழ்ப்பாணம் குற்றதடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் கெலும்பண்டார தலமையிலான பொலீஸ் குழு இன்று சுற்றிவளைத்தது.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். தேடப்பட்ட மற்றொரு சந்தேக நபர் ஒருவரை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் தனது காரில் ஏற்றிவந்து பொலீஸாரிடம் பாரப்படுத்தினார்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கெரோயின் போதைபொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலீஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் பொலீஸார் விசாரணைகளை மேற்கோண்டுள்ளனர்.