மூன்று புதிய ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநராகத் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரே ஜனாதிபதி முன்னிலையில் உறுதிமொழியேற்று பதவிப் பொறுப்பைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
இதேநேரம், வடக்கு மக்களுக்குத் தேவையானவற்றை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளார் என்றும், ரணிலின் தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் வடமாகாணத்தின் புதிய ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியிருக்கிறார்.
வடமாகாணத்தின் புதிய ஆளுநராக இன்றைதினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேறும் போது செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மக்களுக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையான ஒத்துழைப்பை அர்ப்பணிப்புடன் வழங்குவார் என்று உறுதயளித்துள்ளார். இவ்விதமான தாரளமான மனதுடைய ஜனாதிபதியின் கருத்துக்களை இட்டு நான் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றேன்.
“வடக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான விடயங்கள் தொடர்பில் தொடர்ந்து கலந்துரையாடுவார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளர்” என்றார்.
மீண்டும் ஆளுநராகப் பதவியேற்றமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதியின் அழைப்பின் பேரில இப்பதவியை ஏற்றுக் கொண்டுள்ளேன். வடக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்காகக் கொண்டு வடக்கு மக்கள் பிரதிநிதிகளுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.
