இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் இனப் படுகொலையான முள்ளிவாய்க்கால் படுகொலையின் 14 ஆவது ஆண்டு நிறைவு அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் பொதுச் சுடரை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து உயிர்நீத்த உறவுகளுக்காக மௌன வணக்கம் செலுத்தப்பட்டதுடன், மலரஞ்சலியும் இடம்பெற்றது.
அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் – மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகள் உட்படப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.