விளையாட்டுகளில் தனிச் சிறப்பு மிக்க மாணவர்களை விசேட அனுமதித் திட்டத்தின் கீழ் விளையாட்டுத் துறை சார்ந்த விசேட கற்கை நெறிகளுக்கு அனுமதிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
இந்த விசேட உள்ளீர்ப்பின் கீழ் அனுமதிபெறும் மாணவர்கள் இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம், மற்றும் களனிய பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் மற்றும் இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம், யாழ்ப்பான பல்கலைக்கழகம் ஆகியவற்றினால் நடாத்தப்படும் உடற்றொழில் கல்வி ஆகிய பட்ட பாடநெறிகளைத் தொடர்வதற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றிருத்தல் அல்லது பங்கு பற்றி இருத்தல், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் – ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அல்லது ‘சார்க்’ விளையாட்டுப் போட்டிகளில் குறைந்தது தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கங்களைப் வென்றிருத்தல், பொதுநலவாய விளையாட்டுக்கள், ஆசிய விளையாட்டுக்கள், சார்க் விளையாட்டுக்கள் ஆகியவற்றிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட உலகக் கிண்ணத்துக்கான கிரிக்கெட், காற்பந்தாட்டம், றகர், கூடைப்பந்து மற்றும் கரப்பந்தாட்டம் அல்லது வேறு ஏதாவது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முடிவு செய்யப்பட்ட விளையாட்டில் இலங்கையைப் பிரதிநிதிப்படுத்தும் தேசிய அணிகளில் அங்கத்தவராக இருத்தல் ஆகியன விளையாட்டுகளில் தனிச் சிறப்புத் தகைமைகளாகக் கருதப்படும் என்றும், இத்தகைய தராதரங்களை வைத்திருந்து இவ் விசேட அனுமதியின் கீழ் குறித்த கற்கை நெறிக்களுக்குத் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகள், உரிய கற்கை நெறி ஆரம்பிப்பதற்கு முன்னர், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் பொருத்தமான அடிப்படைக் கற்கைநெறியைக் கட்டாயமாகப் பூர்த்தி செய்தல் வேண்டும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.
இந்த விசேட அனுமதிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி ஆகும்.