பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மாணவர் சமூகத்திற்கும் பாரதூரமானது தொடர்ச்சியாக இதனை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் முன் வந்தால் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் மாணவர்களின் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூட்டத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தொடர்ச்சியாகத் தமிழ் மக்களுடைய பிரச்சனையானது இலங்கையிலே வடகிழக்கு மக்களுடைய அடக்கு முறையாக இடம் பெறுகிறது. அந்த வகையிலே பயங்கரவாத தடைச் சட்டம் என்ற வகையில் 44 வருடமாக எங்களுடைய மக்களை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருந்த பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாறாக இப்பொழுது ஒரு சட்டமூலம் வந்திருக்கின்றது . இந்த சட்டம் மூலம் எங்களை அடக்குவதற்கான சட்டமூலமே. அதாவது ஒரு மனிதன் சுதந்திரமாக ஜனநாயக ரீதியாகத் தன்னுடைய கருத்தைத் தெரிவிப்பதற்கு எதிராகக் கடுமையாக இயற்றப்பட்ட சட்ட மூலமாகவே இந்த சட்ட மூலம் காணப்படுகிறது.
மாணவர் சமூகத்தைப் பாரியளவில் இச் சட்டமூலம் பாதித்திருக்கிறது. எங்களுடைய மக்களின் குரல் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் நசுக்கபடுகின்து. மேலும் ஜனநாயக ரீதியாக போராடுகின்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டு இதன் மூலம் அச்சுறுத்தப்படுகின்றார்கள். அந்த வகையிலே இந்த புதிதாக உருமாறி வரவிருக்கின்ற இந்த சட்டமூலத்தை சர்வதேசம் தலையிட்டு நிறுத்த வேண்டும்.
இலங்கை பாராளுமன்றத்திலே இந்த சட்டமூலமானது ஒரு நியாயப்படுத்தப்பட்ட சட்ட மூலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு வழங்ககூடாது. ஆகவே இதனை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முற்றாக எதிர்கின்றது. தொடர்சியாக இப் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீதான நகர்வுகள் அதனை நடைமுறைபடுத்த முன்னெடுக்கப்படுமானால் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார் .