- இன வேறுபாடின்றி முஸ்லீம்களும் இணைவு
- தனியார் போக்குவரத்து இல்லை
- கடைகள் பூட்டு
- தொழிற்சங்கங்கள் களத்தில்
- கல்வி நிலையங்களும் இயங்கா நிலை
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், வடக்குக் கிழக்கில் பௌத்த சிங்கள பேரினவாதத்தால் தமிழர் மரபுரிமைகள் அழிக்கப்படுவதைக் கண்டித்தும் இன்று வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டு பாடசாலைகள் இயங்காமல் வடக்கு கிழக்கு முழுமையாக முடக்கப்படும் என்று இந்த முழு அடைப்பு ஏற்பாட்டாளர்கள்ள் தெரிவித்தனர்.
ஏழு தமிழ்க் கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. பொது அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள், தொழிற் சங்கங்கள், தொழிலாளர் அமைப்புக்கள் என அனைத்துத் தரப்புக்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியினால் முன் வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்திருந்த நிலையில், அன்றைய தினத்தில் தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காத்திரமாக வெளிப்படுத்தும் வகையில் தமிழ்க் கட்சிகள் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
இன்று போக்குவரத்துச் சேவைகள் எவையும் இடம்பெறாது என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிற் சங்கங்கள் அத்தகைய அறிவிப்புக்களை எதையும் விடுக்காத போதும், போக்குவரத்தில் ஈடுபட்டால் பேருந்துகள் தாக்கப்படக் கூடும் என்கிற அச்சத்தால் தமது சேவைகளும் நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று இ. போ. ச வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் சங்கங்களும் இந்தப் போராட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்திருப்பதால் பாடசாலைகள் இடம்பெறாது. அரச அலுவலகங்களுக்குப் பணியாளர்கள் வருகை தந்தாலும் வழக்கம் போன்று கதவுகளை அடைத்துவிட்டு, பொதுமக்கள் பணிகள் எவற்றிலும் ஈடுபடமாட்டார்கள் என்றும் தெரிகிறது.
