இந்திய இராணுவத்தின் பிரசன்னத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்த தியாகி அன்னை பூபதியின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் ஒரு அங்கமாக அவரது உருவப் படமேந்திய நினைவூர்தி ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று மட்டக்களப்பு நோக்கிப் புறப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று நண்பகல் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் இருந்து இந்த நினைவூர்தி புறப்பட்டது. நல்லை ஆதீனத்தை நினைவூர்தி கடந்த வேளையில், அங்கு அடையாள உணவொறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இன்று நல்லூரில் இருந்து புறப்பட்டு கிளிநொச்சி, மாங்குளம், மல்லாவி வரை சென்று மீண்டும் மாங்குளம் வந்து அங்கிருந்து புளியங்குளம், நெடுங்கேணி, முள்ளியவளை ஊடாக முல்லைத்தீவைச் சென்றடையும் இந்த நினைவூர்தி, நாளை காலை முல்லைத்தீவில் இருந்து திருகோணமலையைச் சென்றடையும் என்றும் நாளை மறுதினம் திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பை நோக்கிப் புறப்பட்டு, மட்டக்களப்பு – கல்லடியில் அமைந்துள்ள தியாகி அன்னை பூபதியின் நினைவுத் தூபியைச் சென்றடையும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
1988 ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படைக்கு எதிராகக் குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு – அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. “உடனடியாகப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.”,
“புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும்.” ஆகிய இரு கோரிக்கைகளையும் முன்வைத்து மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் குருந்தை மரநிழலில் 1988 மார்ச் 19ஆம் திகதி அன்னை பூபதி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
அன்னை பூபதி நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணா நோன்பு இருந்தார். இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று காலை 8.45, மணிக்கு அன்னை பூபதி உயிர் நீத்தார்.