ஆக்கிரமிப்புக்கு எதிராக நல்லூரில் உணவொறுப்புப் போராட்டம் ஆரம்பம்!

 

தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம்
என்ற தொனிப்பொருளிலான அடையாள உணவொறுப்புப் போராட்டமும், கையெழுத்துத் திரட்டலும் நல்லூரில் ஆரம்பமாகியுள்ளது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்துக்கு அருகில் இன்று காலை முதல் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்தப் போராட்டத்தில் நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், தென் கயிலை ஆதீன முதல்வர் சிவத்திரு அகத்தியர் அடிகளார், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள், யாழ். மறை மாவட்டக் குரு முதல்வர் ஜெபரட்ணம், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோருடன் அகில இலங்கை சைவ மகா சபை, தமிழ் சைவப் பேரவை மற்றும் சமய அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிறிஸ்தவ மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்படப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் மக்கள் சார்ந்த தேசிய சக்திகள், சமய சமூக தன்னார்வ அமைப்புக்கள் எனப் பல தரப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் 5 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1. அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ விக்கிரகங்கள் உடனடியாக மீள் நிர்மாணம் செய்யப்படவேண்டும். நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

2. குருந்தூர் மலை, கண்ணியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய வர்த்தமானி இரத்துச் செய்யப்பட வேண்டும்.

3. இன மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

4.மட்டக்களப்பு மயிலத்தனைமடு மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ்ப் பண்ணையாளர்களின் மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை உறுதிப்படுத்த வேண்டும்.

5. போருக்குப் பிந்திய இன மதப் பரம்பலை மாற்றியமைக்கும் திட்டமிட்ட பெரும் குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள உணவொறுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!