சைவத் தொன்மை அடையாளங்களை, வழிபாட்டிடங்களை அழிக்கும் தொல்லியல்திணைக் களத்தின் செயற்பாடுகளை நிறுத்தவும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் – நல்லூரில் உள்ள நல்லை ஆதீன முன்றலில் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நடத்தப் போவதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்தின் போது, தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்தக் கட்டமைப்பு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் மக்கள் சார்ந்த தேசிய சக்திகள், சமய சமூக தன்னார்வ அமைப்புக்கள் எனப் பல தரப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் 5 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
1. அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ விக்கிரகங்கள் உடனடியாக மீள் நிர்மாணம் செய்யப்படவேண்டும். நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
2. குருந்தூர் மலை, கண்ணியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய வர்த்தமானி இரத்துச் செய்யப்பட வேண்டும்.
3. இன மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
4.மட்டக்களப்பு மயிலத்தனைமடு மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ்ப் பண்ணையாளர்களின் மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை உறுதிப்படுத்த வேண்டும்.
5. போருக்குப் பிந்திய இன மதப் பரம்பலை மாற்றியமைக்கும் திட்டமிட்ட பெரும் குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எம் மரபுரிமைகளை வென்றெடுக்க ஆன்மீகத் தலைவர்கள்,ஆலய அறங்காவலர்கள், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், சமுக மட்ட அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகம் ஆகியவற்றின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்படும் இந்த எழுச்சிப் போராட்டத்தின் மூலம் தமிழர் மரபுரிமைகளை வென்றெடுக்க தமிழ் மக்கள் திரண்டு வந்து பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த காலங்களில், பல கால அவகாசங்கள் வழங்கப்பட்டு, ஏமாற்றப்பட்ட நிலையில் உரிய தீர்வு உடனடியாக வழங்கப்படாதவிடத்து தொடர் போராட்டங்கள் பல்வேறு பரிணாமங்களில் முன்னெடுக்கப்படும் என்பதை ஆட்சியாளர்களுக்கும், பன்னாட்டுச் சமூகத்துக்கும் இச் சந்தர்ப்பத்தில் ஆழமாக வலியுறுத்தி நிற்கின்றோம் – என்றுள்ளது.
