இலங்கையின் 37ஆவது பொலீஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 61 இ (பி) பிரிவின்படி, அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் இந்த நியமனம் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவருக்கான நியமனக்கடிதம்நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவினால் வழங்கப்பட்டது.
இலங்கை பொலீஸ் திணைக்களத்தில் பொலீஸ் கான்ஸ்டபிளாக இணைந்து, படிப்படியாகப் பதவியுயர்வுகளைப் பெற்று பொலீஸ்மா அதிபராகப் பதவிபெற்றிருக்கும் முதலாவது பொலீஸ் அலுவலராக பொலீஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
பொலிஸ் மாஅதிபராக இருந்த தேசபந்து தென்னகோனை பதவி விலக்கும் யோசனைக்கு பாராளுமன்றம் வழங்கிய அனுமதியைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றி வந்த பிரியந்த வீரசூரியவை நியமிக்கும் ஜனாதிபதியின் யோசனைக்கு அரசியலமைப்பு பேரவை வழங்கிய அனுமதியின் அடிப்படையில் குறித்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
