கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல், விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பீடங்களில் கல்வி கற்கும் மாணவர்களால் முன்வைக்கப்பட்ட சில அடிப்படை வசதிகளை விரைவில் மேம்படுத்துவதற்குப் பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் வடக்குக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் நேற்று முன்தினம், 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, மாணவர்களுடன் கலந்துரையாடிய சமயத்திலேயே மாணவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் அக்கறையுடன் கேட்ட பிரதமர் மாணவர்களின் கோரிக்கைகளைப் படிப்படியாகத் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பில், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பொறியியல், விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் பீடாதிபதிகள், பதிவாளர், நிதியாளர், பிரதம பொறியியலாளர், நிர்வாக அதிகாரிகள் மற்றும் மாணவ பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
குடிநீர் விநியோகம், விடுதி வசதிகள் உட்படப் பல அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகள் மாணவர்கள் சார்பில் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டன.











