செம்மணி புதைகுழி மீட்புகள் தொடர்பில் தேவநேசன் அறிக்கையை இணைத்து ஆய்வு செய்ய வேண்டும் – சுமந்திரன் நம்பிக்கை!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையிலான குழுவினரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ள விபரங்களை தற்போது செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் கண்டறியப்படும் மனித எச்சங்களுடன் தொடர்புபடுத்தி ஆராய்வதன் ஊடாக பல்வேறு உண்மைகளை வெளிக்கொணரமுடியும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கென கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையில் கே.எச்.கமிலஸ் பெர்னாண்டோ, ஜெமிஸா இஸ்மாயில் மற்றும் எம்.சி.எம்.இக்பால் ஆகிய உறுப்பினர்களுடன்கூடியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.

1990 – 1998 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் பதிவான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் மற்றும் அப்பகுதிகளின் வீட்டு உரிமையாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை என்பன தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென நியமிக்கப்பட்ட இக்குழுவின் அறிக்கையில், 1990 – 1998 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டோரின் பெயர், வயது, காணாமலாக்கப்பட்ட ஆண்டு, இறுதியாகச் சென்றிருந்த இடம், நேரடி சாட்சி, முறைப்பாடு அளித்தவர் விபரம் உள்ளிட்ட அவசியமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனவே இதுபற்றிச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், அவ்வறிக்கையில் உள்ள விபரங்களையும் தற்போது செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் கண்டறியப்படும் மனித எச்சங்கள் பற்றிய விபரங்களையும் ஒன்றிணைத்து ஆராய்வதன் ஊடாக இம்மனித எச்சங்களுக்குச் சொந்தமான நபர்கள் தொடர்பான பல்வேறு உண்மைகளை வெளிக்கொணரமுடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!