யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் பொலீசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு தவத்திரு வேலன் சுவாமிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் பெப்ருவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டளை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவினால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் – நல்லூரில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அகிம்சை முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த முயன்ற சமயம், பொலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலகத்தில், பொலீசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தர் என்ற குறிறச்சாட்டில் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இவர் மீதான வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாண மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இவருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச் சாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் மனோகரன் சோமபாலன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உ றவினர்கள் சங்கத்தின் வவுனியா மாவட்டச் செயலாளர் எஸ். ஜெனிற்றா ஆகியோரையும் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
வழக்கு மீதான விசாரணைகளை எதிர்வரும் பெப்ருவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், மனோகரன் சோமபாலன் மற்றும் எஸ். ஜெனிற்றா ஆகியோரைத் தலா ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ததுடன், பொலிசாரிடம் வாய் வாக்குமூலம் அளிக்குமாறும் பணித்துள்ளது. இந்த வழக்குடன் தொடர்புடைய மேலும் 6 சந்தேக நபர்களுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.